அன்னதான நிகழ்ச்சியில் செய்தியாளர் சந்திப்பு


ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் அன்னதானம் குமாரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: இன்றைக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக திமுக உள்ளது. இன்றைக்கு போதை கடத்தலால் தமிழகம் வெட்கி தலை குணிந்துள்ளது. கடத்தலில் மாஸ்டர் பிரைன் ஆக உள்ள திமுகவை சேர்ந்த ஜாபர் முதலமைச்சர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியே வந்துள்ளது. இந்த போதை கடத்தல் தொடர்பாக காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் உரிய விளக்கம் சொல்ல வேண்டும் அல்லது, உரிய நடவடிக்கை எடுப்பேன் மக்களை பாதுகாப்போம் என்று சொல்ல வேண்டும். ஆனால் எதுவும் சொல்லவில்லை. இதனால் மக்கள் அச்சப்படுகிறார்கள். இதற்கு அரசு பதவியில் இல்லாத ஆர்.எஸ்.பாரதி பதில் கூறுகிறார். இன்றைக்கு புரட்சித்தலைவரையும், புரட்சித்தலைவி அம்மாவையும் அனைவரும் பாராட்டி கூறுகிறார்கள். திமுகவில் கூட புரட்சித்தலைவருக்கு வரும் கூட்டத்தை போல உதயநிதிக்கு வருகிறார்கள் என்று திமுக நிர்வாகிகள் கூறி வருகிறார்கள் ஏனென்றால்,  கருணாநிதி போல என்ற கூறுவதற்கு திமுகவிலேயே பயம் ஏற்பட்டுள்ளது.


அமைச்சர் உதயநிதியை இன்றைக்கு உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது சட்டப்பிரிவு 19,1Aபடி பேச்சு, எழுத்துரிமை மீறி உள்ளார். அதேபோல் 25 பிரிவின் படி மற்ற மதத்தினர் சுதந்திரம் குறித்து பேசுவதை மீறி உள்ளார் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்து கண்டித்துள்ளது. இந்நேரம் இந்த கண்டனத்திற்கு மற்றவர்கள் என்றால் இன்றைக்கு அமைச்சர் பதவியில் இருந்து எடுத்திருப்பார்கள். ஆனால் முதலமைச்சர் மகன் என்ற காரணத்தால் பதவியில் உள்ளார். மயிலாடுதுறையில் புதிய ஆட்சியர் கட்டிட திறப்பு விழாவில், நான் டெல்டாகாரன் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் அந்த விழாவில் காவிரியில் மேகதாதுவில் நான் இருக்கும் வரை அணையை  கட்ட விட மாட்டேன் என்று கூறும் தகுதி உள்ளதா?அந்த விழாவில் மத்திய அரசு ஒரு பைசா கூட நிதித் தரவில்லை என்று கூறுகிறார். சொல்ல வேண்டிய இடம் நாடாளுமன்றம், நாடாளுமன்றத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர் வைத்து கேட்டிருக்க வேண்டாமா? இதே காவிரி பிரச்னையில் 22 நாட்கள் அவையை முடக்கி காவிரி ஆணையத்தை எடப்பாடியார் அமைத்துக் கொடுத்தார். அதேபோல் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் தமிழக வஞ்சிக்கப்பட்டுள்ளது , ஜி.எஸ்.டி பங்கு தொகையும் கேட்கவில்லை இப்படி அனைத்தையும் கேட்கும் இடத்தில் கேட்டு  புலி போல் பாயாமல், பூனை போல் பதுங்கும் மர்மம் என்ன? ஏனென்றால் தங்கள் மீது ஊழல் வழக்கு பாயும் என்ற அச்சம் உள்ளது. புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் மாணவர்களுக்கு மடிக்கணியுடன் கல்வி உபகரணங்களை வழங்கினார். ஆனால் இன்றைக்கு மாணவர்கள் கையில் போதைப்பொருள் தவழுகிறது. இதைத்தான் எடப்பாடியார் தமிழகத்தின் ஒரு சொட்டு போதைப்பொருள் ஒழியும் வரை போராடுவேன் என்று கூறியுள்ளார். எடப்பாடியார் தெளிவாக சொல்லிவிட்டார் பி.ஜே.பி., கூட்டணி இல்லை என்று இன்றைக்கு எடப்பாடியார் அரசியலில் ராஜதந்திரத்துடன் தெளிவான முடிவை எடுத்து வருகிறார். தமிழக உரிமையை மீட்டெடுக்க, தமிழகத்தை காப்பாற்ற வலுமையான கூட்டணியை அமைக்கும் பணியில் பூர்வாங்க வேலை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.