இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இந்திய ரயில்வே துறை அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ரயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது. அதன்படி, முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பகுதி அதி விரைவு சொகுசு வந்தேபாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளதோடு, மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நிறுத்தங்களால் பயணம் எளிதாகிறது.
இந்நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை தவிர பிறநாட்களில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகளை பொறுத்தமட்டில் ரயில்வே வாரியத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, இந்த பெட்டிகளை கொண்டு ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு ஒரு வந்தேபாரத் ரயிலும், தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு ஒரு வந்தேபாரத் ரயிலும் இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து, ராமேசுவரம்-சென்னை வந்தேபாரத் ரயிலுக்கு தென்னக ரயில்வே பரிந்துரை செய்துள்ளதாக முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, ராமேசுவரம்-சென்னை இடையே விரைவில் வந்தேபாரத் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்று தூத்துக்குடி - சென்னைக்கும் வந்தே பாரத் சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.