'வந்தேன்னா வாயிலயே வெட்டிருவேன்'! என வடிவேலு மாதிரி கிராமத்து பெரியவர்களை அவதூறாக பேசி வம்பில் சிக்கிய கிராமத்து வாலிபர். 'துபாயாம்ல துபாயி..' போட்ரா அபராதத்த என பொங்கி எழுந்து ஒரு லட்சம் அபராதம் விதித்த கிராமத்து பஞ்சாயத்து. எங்கு நடந்தது... பார்க்கலாம்.
துபாயில் பணிபுரியும் ஒருவர் தனது சொந்த கிராமத்து பெரியவர்களை ஆபாசமாக பேசி வாட்ஸ் அப்பில் வெளியிட்ட ஆடியோவை ஊருக்கே ஒலிபரப்பி, ஊர் பஞ்சாயத்தில் அந்த வாலிபருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர் கிராமத்து நிர்வாகிகள் இது தான் செய்தி. எப்படி நடந்தது... எங்கு நடந்தது... அனைத்தையும் விரிவாக பார்க்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மடை ஊராட்சிக்கு உட்பட்ட பால்கரை கிராமத்தில் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் குடிநீர் ஆதாரமான மரைக்காயர் ஊருணி ஒரு சில நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற, ஊர்த் தலைவர் கருப்பையா தலைமையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில், குழு அமைத்து ஆக்கிரமிப்பை அகற்ற ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, சில நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில் மரைக்காயர் ஊரணியின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில், அதே ஊரைச் சேர்ந்த, தற்போது துபாயில் பணிபுரிந்துவரும் முத்துக்குமார் குடும்பத்தினர் வசம் இருந்த இடமும் அளக்கப்பட்டது. இதை, குடும்பத்தினர் மூலம் அறிந்த முத்துக்குமார், நல்ல மதுபோதையில் துபாயில் இருந்தபடியே ஊரின் முக்கிய பெரியவர்களை ஆபாசமாக பேசி, அதை வாட்ஸ் அப்பில் ஆடியோக்களாக பெருமையாக அனுப்பியுள்ளார். இந்தப் பேச்சு அந்த ஊரைச்சேர்ந்த பல்வேறு குழுக்களிலும் வைரலாக பரவியது. இதையடுத்து கிராம பிரமுகர்கள் அந்தப் பேச்சை சிடியாக பதிவு செய்து, எஸ்பி அலுவலகத்தில் வாலிபர் முத்துக்குமார் மீது புகார் அளித்தனர். ஆனால், இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, முத்துக்குமாரின் பேச்சை மைக்செட் குழாய் கட்டி ஒலிபெருக்கி மூலம் கிராமம் முழுவதும் ஒலிபரப்பிக் காட்டியுள்ளனர். இதைக்கேட்ட கிராமத்தினர் மிகவும் ஆத்திரமடைந்து இதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் முடிவெடுத்துள்ளனர். இதனை அடுத்து கிராமத்தின் சார்பில் ஊர் கூட்டத்தைக்கூட்டி நாட்டுப்பஞ்சாயத்து பேசி முத்துக்குமாருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று அந்த கிராமப் பகுதிக்கு வந்த ராமநாதபுரம் டிஎஸ்பி கிராமத்து பொதுமக்கள் நடந்த சம்பவங்கள் விசாரித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பால்கரை கிராம மக்கள் முத்துக்குமார் மீது புகார் கொடுத்தபோது காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுத்திருந்தால் கிராம மக்கள் அபராதமும் விதித்துள்ள சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் எனச் சொல்லப்படுகிறது
'டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்கு புள்ள தான்னு சொல்லுவாங்க'
அந்த மாதிரி அமெரிக்கா போனாலும், ஆப்பிரிக்கா போனாலும் டாலர்ல சம்பாதிச்சாலும் சொந்த ஊர் கார்காரங்கள மதிக்க கத்துக்கணும், அதை விட்டுட்டு துபாய்ல இருக்குற தைரியத்துல ஊர் பெரியவங்கள தாறுமாறாக மரியாதை குறைவாக பேசி அதை வாட்ஸ் அப்ல அனுப்பி ஊரு பூரா பெருமைப்பட்டு கிட்டா இப்படித்தான் அபராதம் கட்ட வேண்டிய நிலைமை வரும் அப்டின்னு அந்த ஊரு ஆண்களும் பெண்களும் பேசிக்கிறாங்க. நிலத்தை அளந்ததுக்கே ஆடியோ போட்டவன்... இப்போ அபராதம் போட்ருங்கானுங்க... என்ன செய்யப்போறானோ... என மற்றொரு தரப்பு துபாய்காரரின் அடுத்தகட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது.