கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணம் மரணம் அடைந்த  ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது; குடியரசுத்தலைவரிடமிருந்து அவரது மனைவி வானதி பெற்றுக்கொண்டார். இந்திய, சீன எல்லைப் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவிவந்தது. லடாக் பகுதியில் இந்தியக் கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தொடர்ந்து அங்கு படைகளைக் குவித்து வந்தது. முன்னதாக சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் லடாக் பகுதியில் பறந்ததால் கடும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் இந்திய சீன, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் குவிக்கப்பட்ட சீனப் படைகள் சற்று பின்வாங்கின. இதனால் எல்லையில் நிலவி வந்த பதற்றமான சூழல் அடுத்த சில நாள்களில் குறைந்தது.




இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், இரும்புக் கம்பிகள் கொண்டு இரு தரப்பினரும் மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் மூத்த ராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த `ஹவில்தார் (gunner)' பழனியும் ஒருவர். அவரின் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து பழனியின் உடல் அவரின் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.வீரமரணம் அடைந்த பழனிக்கு வானதிதேவி என்ற மனைவி மற்றும் பிரசன்னா என்ற 10 வயது மகன் மற்றும் திவ்யா என்ற 8 வயது மகளும் உள்ளனர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பழனி கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். பழனியின் சகோதரர் இதயக்கனியும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராமநாதபுரத்தை அடுத்துள்ள கழுகூராணி கஜினி நகர் பகுதியில் புதிய வீடு கட்டியிருந்தனர் பழனி குடும்பத்தினர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன்  13ஆம் தேதி இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. லடாக் பகுதியில் பிரச்னை நிலவி வந்ததால் பழனிக்கு விடுமுறை கிடைக்காததால்   கிரகப்பிரவேசத்துக்கு பழனி வர இயலவில்லை. இந்நிலையில், பழனியின் மரணச் செய்தி வந்ததும்  அவர்களது குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


 




இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள் பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தனர். தமிழ்நாடு அரசு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியதோடு மட்டுமல்லாமல், பழனியின் மனைவிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கியது. இச்சூழலில் கடந்த ஜனவரி மாதம் வீர மரணம் அடைந்த வீரர் பழனிக்கு ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்தது. ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனியின் சார்பில் அவரது மனைவி வானதி தேவி வீர் சக்ரா விருதைப் பெற்றுக்கொண்டார். தனது கணவரின் வீர தீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் கிடைத்த மரியாதையாகவும் நாட்டிற்காக அவர் செய்த சேவைக்குக் கிடைத்த இவ்விருதை பெரிய அங்கீகாரமாகவும் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல உள்ளூர் பொதுமக்கள் இதுகுறித்து கூறுகையில், மத்திய அரசு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த எங்கள் மண்ணில் பிறந்த இந்த ராணுவ வீரருக்கு வீர் சக்ரா விருது வழங்கிப் பெருமைப் படுத்தி உள்ளது என பெருமிதம் தெரிவித்தனர்.