மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஐயப்பன்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில்," மேலூர் தாலுகா, சுண்ணாம்பூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக தூத்திரி மற்றும் கீரனூர் பாசன குளங்கள் உள்ளன. பொது மக்களின் தேவைக்காக மட்டுமின்றி சுமார் 1000 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களும் இந்த குளங்கள் மூலமாகவே பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் தனிநபர் ஒருவர் 3 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவில் கீரனூர் கிராமத்தில் மணல் குவாரியை நடத்தி வருகிறார். எட்டு இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் ஆழமாக மணல் எடுக்கப்பட்டு, 800 லாரிகள் மூலமாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதற்கு முறையாக அனுமதியும் பெறப்படவில்லை.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதிக ஆழத்திற்கு சென்றுவிட்டது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அரசு அதிகாரிகள் சட்டவிரோத மணல் குவாரி நடத்துவதற்கு உதவியாக இருப்பது போல் தெரிகிறது. ஆகவே மதுரை மாவட்டம் கீரனூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் குவாரியை மூடவும், சட்ட விரோதமாக குவாரியை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ததாகவும், அதன் அறிக்கையை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள் மாவட்ட ஆட்சியரும், மேலூர் வட்டாட்சியர் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.