இலங்கை இஸ்லாமியர்களின் சமையலில் இடம்பெறும் இனிப்பு வகை உணவுகளில் 'தொதல்' மிகவும் முக்கியமான உணவு. இது பச்சரிசி, கோதுமைப்பால், தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் சர்க்கரைக் கழி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பட்சணம் ஃபேமஸ். திருநெல்வேலி அல்வா முதல் சாத்தூர் காராசேவு, கோவில்பட்டி கடலைமிட்டாய், மதுரை ஜிகர்தண்டா, விருதுநகர் பரோட்டா, சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, தேனி இனிப்பு போளி, கும்பகோணம் டிகிரி காஃபி, ஆம்பூர் பிரியாணி, காஞ்சிபுரம் இட்லி, நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு, காரைக்குடி செட்டிநாட்டு சமையல், பழனி பஞ்சாமிர்தம், செங்கோட்டை பார்டர் பரோட்டா, ஆற்காடு மக்கன் பேடா, ஊட்டி வருக்கி, தென்காசி சொதி, சென்னை வடகறி, ஈரோடு கொங்கு ஸ்பெஷல் சமையல், கோயம்பத்தூர் தேங்காய் பன், மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரோன்ஸ், திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி, அந்த வகையில் கீழக்கரை என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது தொதல் அல்வாதான்




ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பகுதியில் இந்த வகை இனிப்பு மிகவும் பிரபலமாகி உள்ளது. உள்ளூர் மட்டுமல்ல வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் மிகவும் ஆர்வத்தோடு வாங்கி செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்ல, தென்மாவட்டங்களில் குறிப்பாக கீழக்கரை, மரைக்காயர் பட்டிணம், காயல்பட்டிணம், அதிராமப்பட்டிணம் ஆகிய ஊர்களில் வாழும் இஸ்லாமியர்கள் வர்த்தக ரீதியாக இலங்கைக்குச் சென்று வந்ததன் வழியாக அங்கு இருந்த பலவகையான உணவு வகைகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. அதில் தொதல் முக்கியமான பண்டமாகும்.




இங்கு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சுற்றி தென்னந்தோப்புகள் அதிகம். இதனால் கீழக்கரையில் 50க்கும் மேற்பட்டவர்கள் குடிசைத் தொழிலாகத் தொதலை செய்து சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இங்குச் செய்யப்படும் தொதல் ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கிறது. ஒரு கிலோ தொதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.. 250 வரையிலும் விற்கப்படுகின்றது. இது, கீழக்கரையில் பேக்கரி முதல் தெருவோர  டீக்கடை வரையிலும் சர்வ சாதாரணமாக அனைத்துக் கடைகளிலும் விற்பனை செய்யப்படுவதை நாம் காணலாம். இளஞ்சிவப்பு மற்றும் கோதுமை நிறத்தில், அல்வாவை சுவைத்தவர்களுக்கு இதன் சுவை தெரியும்., 


 


'வித்தியாசமான விருந்து, கீழக்கரை துதல்'


இதை எப்படி செய்யவேண்டும் என, கீழக்கரையை சேர்ந்த ஜாஹிர் உசேனிடம் பேச்சுக்கொடுத்தோம்' அவரும் பேச ஆரம்பித்தார்…


தேங்காய்ப்பாலை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தி, அதில், ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து காய்ச்சி, பின், சிறிதளவு சீனி, நாட்டுக் கருப்பட்டி மற்றும் நீரில் கரைத்த மைதா மாவு சேர்த்து, அடிப் பிடிக்காமல், மூன்று மணி நேரம் கிளறினால், ஜெல்லி போன்ற பதத்திற்கு வரும். அப்போது, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், ஏலக்காய் பொடி மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து இறக்கினால், துதல் அல்வா தயாராகி விடும். தேங்காய்ப் பால், நாட்டுக் கருப்பட்டி மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய் என, உடலுக்கு ஊட்டம் தரும் பொருட்களில் தயாரிப்பதால், அனைவரும் சாப்பிடலாம். இங்கு தயாரிக்கப்படும் தொதல்  மிகவும் தித்திப்பான சுவையுடையது. சாப்பிட்டவர்கள் அடிக்கடி செய்து சாப்பிட நினைப்பார்கள். பிறந்தநாள், கிறிஸ்துமஸ், புதுவருடபிறப்பு, தீபாவளி என எந்தவிதமான கொண்டாட்டத்திற்கும் ஏற்றது இந்த இனிப்பு பலகாரம்.




'இலங்கையில் வியாபாரம் செய்த எங்களது தாத்தா, இதை, இங்கு அறிமுகம் செய்தார். மூன்று தலைமுறைகளாக, 100 ஆண்டுகளை தாண்டி, இதை தயாரித்து, விற்கிறோம். வெளியூர்களுக்கும், மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுக்கும், அதிகளவில் பார்சல் செல்கிறது; 20 நாட்கள் வரை, கெடாது, தேவைப்பட்டால், சூடுபடுத்தி சாப்பிடலாம்,'' தொடர்ந்து பல வருடங்களாக கீழக்கரைத் தெருக்களில் தொதலின் வாசம் அனைவரையும் வசீகரித்து வருகிறது. இப்பொழுது அந்த வாசத்தை, நிறம் மாறாமல் அனைவரின் வீடுகளிலும் கொண்டு வந்து சேர்க்கிறது, என கூறினார். இதை, இங்கு  குடிசை தொழிலாகவும் தயாரித்து, விற்கின்றனர்.