ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் 114 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குருபூஜை விழா அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவாக விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்களும் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள்,பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் இங்கு வந்து அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் சிலர், உற்சாக மிகுதியில் பாதுகாப்பு பணிக்காக வந்த காவல்துறை வாகனம் மற்றும் அரசு அதிகாரி வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் குத்தாட்டம் போட்டனர். ஆனால், அன்றைய தினம் உயரதிகாரிகளின் அதிரடி உத்தரவுக்காக போலீசார் மிகவும் பொறுமை காத்தனர். அதில் ஒருவர் அரசு வானத்தை வழிமறித்து காலை வைத்து ஆடும் காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது குருபூஜை நிகழ்வு நல்ல முறையில் நடந்து முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டும் காவல்துறையினர் கேமராக்களில் பதிவு செய்த காட்சிகளை வைத்தும், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில், கடந்த அக்டோபர் 28,29,30 ஆகிய நாட்களில் நடந்த முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்களை இயக்கிய 956 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
'3 கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது'
இதில், திருவாடனை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வாகனம் மீது நடனம் ஆடிய பதிவான வீடியோ காட்சி பதிவுகளை வைத்து கமுதி கோட்டை மேடு பகுதியில் உள்ள பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் நினைவு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அஜய்குமார், கருப்புசாமி, வாசு 3 பேரும், அவர்களோடு செங்கப்படை கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன், உலகநடை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை பின் தொடர்ந்த கமுதி போலீசார் லாவமாக பிடித்து இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறை தேவர் குருபூஜை அன்று தெனாவட்டாக காவல்துறை வாகனத்தின் மீது ஏறி குத்தாட்டம் போட்ட அந்த ஐந்து பேருக்கும் அதற்கான வெகுமதி காத்திருந்ததை அவர்கள் அறியவில்லை.
அதேபோல, தேவர் ஜெயந்தி விழாவின்போது விதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி விதி மீறலில் ஈடுபட்ட 956 பேர் மீது 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அபிராமம் காவல் நிலையத்தில் மட்டும் 20 வழக்குகளில் 22 பேரும், முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட 9 வழக்குகளில் 768 பேரும் உள்ளனர். மேலும், 58 இருசக்கர வாகனங்களும் 39 நான்கு சக்கர வாகனங்களும் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், 14 இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.கார்த்திக் தெரிவித்துள்ளார்.