ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வண்ணாந்தரவை மின் வாரிய  அலுவலகம் அருகே, கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபா் ஷேக் உசேன் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ளது. இதில், மேலாளராக ஜவாஹிா் முகைதீன் கருணை (33) என்பவா் பணியாற்றி வருகிறாா்.


இந்நிலையில், அந்த பெட்ரோல் பங்கில் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவில் பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் இருவா் வாளால் மேஜையை வெட்டி, 1.70 லட்சம் மற்றும் கையடக்கக் கணினியை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த  சம்பவம் கீழக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இது குறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், ஆனகுடி கண்மாய் அருகே கொள்ளையா்கள் வந்த வாகனம் கிடப்பது தெரியவந்ததை அடுத்து, போலீஸாா் அவற்றை கைப்பற்றினா்.




இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் இது குறித்து விசாரணையை துரிதப்படுத்த கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷிடம்  உத்தரவிட்டு இருந்தார். இதனிடையே, பெட்ரோல் பங்க்கில் கொள்ளையடித்த மூவரும், மதுரை சென்று அங்கு விலை உயா்ந்த செல்லிடப்பேசியை வாங்கியுள்ளனா். பின்னா், திருப்பூா் சென்று அங்கு பணிபுரியும் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களுடன் தங்கியிருந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. அவா்கள் இருப்பிடத்தை அறிந்த தனிப்படை போலீஸாா், திருப்பூா் விரைந்து அவா்கள் 3 பேரையும் கைது செய்தனா்.




கீழக்கரை குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சிவலிங்கப் பெருமாள் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியாண்டி, காவலர்கள் யாசர், ஜெயகணேஷ், திருமுருகன், தனிப்பிரிவு காவலர் சேகர் உள்ளிட்டோர் மேற்கொண்ட துரித விசாரணையில்,  சின்ன மாயாகுளம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ராஜேஷ், கீழக்கரை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நிர்மல் ராஜ் மற்றும்  பாலமுருகன் உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும்,  சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பெட்ரோல் பங்கில் ஆயுதத்தை  காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர். மேலும், முன்னதாக, ராஜேஷ் சின்னமாயகுளத்தில் ஆட்டோ திருடியதும் தெரியவந்தது.




இவர்கள் கொள்ளையடித்த 1.70 லட்சம் ரூபாயில் இரண்டு இருசக்கர வாகனங்கள், உயர்ரக மொபைல் போன்கள் உள்ளிட்டவை வாங்கியதாக கொள்ளையர்கள் தெரிவித்ததன் பேரில் காவல்துறை அதிகாரிகள் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து இவர்கள் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயங்கர ஆயுதங்களை காட்டி கொள்ளையடித்த குற்றவாளிகளை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த கீழக்கரை காவல் துறை அதிகாரிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.



குறிப்பாக, தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள  கார்த்திக் ஐ.பி.எஸ் பொறுப்பேற்ற பிறகு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருட்டு, கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வணிகர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். காவல்துறையினரின் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே வணிகர்கள் மற்றும்  இரவு நேரம் கடை நடத்துவோர் வர்த்தக நிறுவனத்தினர் நிம்மதியாக தொழில் செய்ய முடியும் எனவும் அவர்கள் கூறினர்.