ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்க மங்கலம் அடுத்த அறியங்கொட்டை அருகே அனிச்சகுடி  காளியம்மன் கோயில் வழிபாட்டில்  பிரச்னை செய்த வீரப்பன் என்ற மலைராஜ் (45) என்பவரை தேடி சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமை காவலர் கண்ணன் ஆகியோர் அனிச்சகுடி கிராமத்திற்கு  சென்று விசாரணை செய்தபோது மதுபோதையில் இருந்த மலைராஜ்,  சார்பு ஆய்வாளர் தமிழ் செல்வனை இடது காதுக்கு மேல் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 




அனிச்சகுடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பூஜை செய்வது தொடர்பாக  மணிராஜ் மற்றும்  துரைராஜ் ஆகிய இரண்டு தரப்பிடையே   கடந்த 2000 ஆண்டு முதல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக இரு தரப்பும் அடிக்கடி மோதி கொண்டதால்,  பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு  கோவில் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று  அண்ணா என்பவர்  காளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது.,  அங்கு துரைராஜ் கோயிலில் பூஜை செய்து  அவருக்கு பிரசாதம் கொடுத்துள்ளார்.  அதற்கு மணிராஜ் தரப்பை சேர்ந்த  மலை ராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தகராறு செய்துள்ளார். மலைராஜ் நல்ல மது போதையில் இருந்ததால், பொதுவானவர்கள் சொன்னதையும்  கேட்காமல் தொடர்ந்து தகராறு செய்துள்ளார்.




இந்நிலையில் அந்த தகவல் காவல்துறைக்கு  புகார் தெரிவிக்கப்பட்டு அந்த புகாரின் அடிப்படையில்  ஆர்.எஸ் மங்கலம் காவல் சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், மற்றும் ஒரு காவலரும் சென்று மலைராஜிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சார்பு ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்ததுடன் திடீரென அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சார்பு ஆய்வாளரை  வெட்டியுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார். தலையில் இடது காதுக்கு மேல் பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் அதிக ரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் ஆய்வாளர் அலறி  துடித்துள்ளார் இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்களும் சக காவலரும்  அவரை மீட்டு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனைக்கு கொண்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு ஏழு இன்ச் நீளம் 1 இன்ச் அகலத்துடன் வெட்டுப்பட்ட இடத்தில்  13 தையல் போடப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட  கண்காணிப்பாளர் கார்த்திக்,  காயமடைந்த தமிழ்ச்செல்வனை  சந்தித்து நேரில் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.இதனையடுத்து, சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய  மலைராஜை ஆர்.எஸ் மங்கலம் காவல் துறையினர் கைது செய்து டிஎஸ்பி சின்ன கண்ணு  தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மது போதையில் தெனாவட்டாக சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்ததுடன் அவரை அரிவாளைக் கொண்டு போதை ஆசாமி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.