ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஏராளமான நாட்டு கருவேல மரங்களும், சீமை கருவேல மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன.




இங்கு பருவமழைக்காலம் துவங்கும் மாதமான செப்டம்பர் மாத கடைசி மற்றும் அக்டோபர் மாதங்களில் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற வெளிநாட்டுகளிலிருந்தும், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் வருவது வழக்கம். அதில் தாழைகொத்தி, செங்கல்நாரை, நத்தைகொத்தி, கிங்பிஷர், கரண்டிவாய்மூக்கான், வில்லோவால்பவர், ஆஸ்திரேலேயா பிளம்மிங்கோ, நாரை, கொக்கு வகைகள், கூழைக்கிடா உள்ளிட்ட 50 வகைக்கு மேற்பட்ட பறவை இனங்கள் வருகை தந்து கூடுகட்டி தங்களின் உணவுத்தேவைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வந்து  சீசன் முடிந்ததும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் திரும்பி செல்ல தொடங்குவது வழக்கம்.




இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததோடு வைகை அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்துள்ளது. இதனால் பெரியகண்மாய் முழுவதும் நீர்நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த மழையால் தேர்த்தங்கள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வெட்டுக்குளம் முழுவதும் நிரம்பி சரணாலய பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் சேர்ந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. இந்த ரம்மியமான சீசனை அனுபவிப்பதற்காக தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு இந்த ஆண்டு அதிகஅளவில் பறவைகள் வந்துள்ளன. கூழைக்கிடா, சாம்பல் நிற நாரை, நத்தை கொத்தி நாரை, கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், முக்குளிப்பான், நாமக்கோழி, கரண்டி வாயன், பெரிய கொக்கு, சிறிய கொக்கு உள்ளிட்ட பல பறவைகள் வந்துள்ளன.




இந்த பறவைகள் சரணாலயத்தின் உட்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்துள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சு பொரித்துள்ளன. தங்களின் குஞ்சுகளுக்காக பறவைகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக இரையை தேடி அந்த பகுதி முழுவதும் சுற்றிதிரிந்து ரீங்காரமிட்டு சென்றுவருகின்றன. இந்த பறவைகளையும் அதன் ரீங்கார குரலையும் ரசிக்கும் வகையில் ஏராளமான பொதுமக்கள் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு சென்று பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.




இவ்வாறு தங்கி உள்ள பறவைகள் சமூக விரோதிகளால் வேட்டையாடி பிடிக்காமல் தடுப்பதற்காக உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம், வனச்சரகர் ஜெபஸ் ஆகியோர் தலைமையில் வனவர் ராஜசேகர், வாட்சர் செல்வராகவன், ஜெகதலபிரதாபன் உள்ளிட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், கண்காணிப்பு உயர்கோபுரத்தில் இருந்து பைனாகுலர் வழியாக சரணாலய பகுதி முழுவதும் நோட்டமிட்டு பறவைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் சரணாலயத்தில் இரை அதிகம் உள்ளதால் நீர்வரத்து குறைந்ததும் மீன்குஞ்சுகள் விடப்படும் என்று வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.