ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நாகேஸ்வரன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், " பரமக்குடியின் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் மிக்க இடமான ஐந்துமுனை உழவர் சந்தை செல்லும் சாலையில் புதிதாக மதுபான சில்லறை விற்பனை கடையை நிறுவ உள்ளனர். இந்தப் பகுதியில் கோவில்களும், மகப்பேறு மருத்துவமனை மற்றும் உழவர் சந்தை அமைந்துள்ளது இதனால் தினசரி பொதுமக்களும் பெண்களும் இந்த பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே மதுபான சில்லறை விற்பனை கடையைத் திறக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே இப்பகுதியில் மதுபான கடை வைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 



கனிம வளத்துறை உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது - மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 


தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மணல் மற்றும் ஜல்லிக் கற்கள் விற்பனை செய்து வருகின்றேன். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியுடன் குவாரிகல் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அனுமதியுடன் நடைபெறும் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் மணல் யூனிட் ஒன்றிற்கு 300 ரூபாயை கனிம வளத்துறை உதவி இயக்குநர் சார்பில் சிலர் லஞ்சமாக வாங்குகின்றனர். இது சட்ட விரோதமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட  குவாரிகளில் இருந்து மணல் எடுப்பதற்கு தொடர்ந்து லஞ்சமாக 300 பெற்று வருகின்றனர்.


இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மனுக்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே ஊழலில் ஈடுபடும் தூத்துக்குடி கனிம வளத்துறை உதவி இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, "முறையாக விசாரிக்காமல் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட இயலாது. அதோடு மனுதாரர் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கவில்லை. ஆகவே மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.