திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி வழக்கு சம்பந்தமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த பணியாளர்களை அதிகரிப்பது, காவல் துறையினரை அதிகரிப்பது, விஐபி தரிசனங்களை முறைபடுத்துவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது போன்ற பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் சுதந்திர பரிபாலனா ஸ்தலத்தார் சபை தலைவர் குமார் ஐயர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு  கடந்த வாரம்  விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,    திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கூடுதல் பணியாளர்கள் நியமனம், காவல்துறை பாதுகாப்பு, விஐபி தரிசனம், கோவிலை தூய்மையாக வைத்தல் போன்ற பல்வேறு தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று  நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு  இன்று  விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் முறையாக சென்று  சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஒழுங்கு படுத்துவதற்காகவும் தனி நீதிபதி பிறப்பித்த  உத்தரவுகளை உடனடியாக பின்பற்றியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டது. 

 

மனுதாரர் தரப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களை கோவிலுக்குள் அழைத்து செல்லும் பணியை திருசுதந்திரர்கள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் கிடையாது. எனவே இவர்களது உரிமை பாதிக்கப்படகூடாது" என தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து  நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 



 







தூத்துக்குடி அபிசால்ட்  உப்பளத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதனை அகற்றுமாறு பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை  

 

புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பான அதிகாரம்  வட்டாட்சியருக்கே உள்ளது எனக் கூறி வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரைக்கிளை. தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் " தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழஅரசரடி பகுதியில் 4.3 ஹெக்டர் பரப்பளவில் அபிசால்ட் என்ற உப்பளம் நடத்தி வருகிறோம். இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும், இந்த உப்பளத்தில் இருந்து வரும் வருமானத்தை நம்பியே உள்ளனர். 

 



 

காந்தி மல்லர் என்பவர், உப்பளம் அமைந்துள்ள இடங்களை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அதனடிப்படையில் வட்டாட்சி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் எங்கள் உப்பளம் அமைந்துள்ள பகுதி புறம்போக்கு நிலம் என வருவாய் துறை ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உப்பளத்தை அகற்ற வேண்டுமென்றும் கீழஅரசரடி ஊராட்சி தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் நான் இதுநாள் வரை எல்லாவிதமான வரியையும் முறையாக கட்டி உள்ளேன். ஆகவே, தொடர்ந்து எங்கள் உப்பளத்தை இயக்கவும், உப்பளத்தை அகற்றுமாறு கீழஅரசரடி ஊராட்சி மன்ற தலைவர் அனுப்பிய  நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் விஜயகுமார் அமர்வு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம் வட்டாட்சியருக்கே உள்ளது என தெரிவித்து, ஊராட்சிமன்ற தலைவர்  அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.