அதிமுகவில் இணைய விரும்பும் ஓ.பி.எஸ், சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் வழக்கு உள்ளிட்ட எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது எனவும் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா அறிவுரை கூறியுள்ளார்.

மேலூரில் ராஜன் செல்லப்பா பேட்டி

மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அ.தி.மு.க., சார்பில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, எந்தவித நிபந்தனையும் இன்றி அ.தி.மு.கவில் இணைய விரும்புவதாக ஓ.பி.எஸ்  பேசியது குறித்து கேட்டதற்கு, ஓ.பி.எஸ் அவர்கள் அ.தி.மு.கவிற்கு எந்தவித இடையூறும் செய்யாமல் ஆறு மாத காலம் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது குறித்து தாங்கள், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என பேட்டி அளித்தார். 
 

திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சி

 
மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, அதிமுகவிற்கு வலிமையான எதிர்காலம் 2026 ஆம் ஆண்டு உள்ளது எனவும் தாங்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தவர். அதிமுக இரட்டை தலைமையாக இருந்த போதும் பெரிய வெற்றியைப் பெறவில்லை என தெரிவித்தார். தற்போது ஒற்றை தலைமையில் புதிய உச்சத்தை தொட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வகையில் தங்களுடைய பயணங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
அ.தி.மு.கவில் எந்தவித நிபந்தனையும் இன்றி இணைய ஓ.பி.எஸ்., விருப்பம் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது
 
அவருடைய செல்வாக்கு நன்றாக இருந்திருக்குமானால் பாஜகவை அவரை கட்சியில் இணைத்து இருக்கும்.  தற்போது செல்வாக்கை இழந்துள்ள ஓபிஎஸ், ஆறு மாத காலம் அதிமுகவிற்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து தாங்கள் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை ஓ.பி.எஸ் போன்றோர் தொடர்ந்து அ.தி.மு.கவுக்கு இழைத்து வருவதாகவும், அது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்றும் மூத்த உறுப்பினர்கள் இதுபோன்று செயல்படுவது அழகல்ல எனவும் தெரிவித்தார். இந்த திண்ணை பிரச்சாரத்தின் பொழுது சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக அம்மா பேரவை கிழக்கு மாவட்ட செயலாளருமான தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.