சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அய்யனார்குளம் கண்மாய் பகுதியில் அமைந்துள்ள செவல்கட்டு பகுதிகளில் பகல் நேரங்களில் ஜே.சி.பி.,இயந்திரம் கொண்டு கிராவல் மண் திருடியதாக கிராம மக்கள் ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் லாரிகளை சிறை பிடித்து வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினரும் மற்றும் காவல்துறையினரும் வழக்கு பதிவுசெய்வதாக கூறிவிட்டு மானாமதுரை காவல் நிலையத்திற்கு லாரிகளை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் அதிகளவு கிராவல் மற்றும் ஆற்று மணல் திருடப்படுவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள்மற்றும் காவல்துறையினர் உடந்தையாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, மானாமதுரை வறட்சியில் கூடுதல் சவாலை சந்திக்கிறது. இந்நிலையில் வறட்சியை இன்னும் ஆழப்படுத்தும் விதமாக கிராவல் மற்றும் மணல் கொள்ளை அதிகரித்துள்ளதாக புகார் எழுகிறது. மேலும் இரவு மற்றும் பகல் நேரங்களில் வைகை ஆற்றுப் பகுதிகளில் மணல் திருட்டு அமோகமாக நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர். அய்யனார்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் அரசு சார்பில் கனிமவளத்துறை கிராவல் மண் எடுக்க அனுமதி கொடுத்து 10 அடிக்கு மேல் கிராவல் மணல் எடுத்தால் கண்மாய்க்கு செல்லும் மழைநீரானது பள்ளங்களில் தேங்கி நிற்பதாகவும்.
இதனால் விவசாயம் செய்யாமல் தவித்து வருவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பகல் நேரங்களில் கிராவல் மண் ஆற்றுமணல் திருடப்படுகிறது. மணல் திருட்டை கிராம நிர்வாக அலுவலர் தாசில்தார் யாரும் கண்டுகொள்ளாத நிலையே இருக்கிறது. இது போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயி நம்மிடம் தெரிவித்தார்.
இது குறித்து மானாமதுரை பகுதி தாசில்தார் சாந்தியிரம் பேசினோம்..,” கிராவல் மண் அள்ளுவதற்கு பரமக்குடி பகுதியில் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் எல்கைப் பகுதி என்பதால் தவறுதால சிவகங்கை மாவட்ட எல்கைக்கு உட்பட்ட பகுதியில் மணல் அள்ளிவிட்டனர். இதனால் எடுத்த மண்ணை பறிமுதல் செய்துவிட்டு, வார்னிங் கொடுத்து அனுப்பியுள்ளோம்” என தெரிவித்தார்.
தெ.புதுக்கோட்டை பகுதியில் உள்ள நிலங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டது என கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்