அமைச்சரின் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் முன் ஜாமீன் பெற்ற 3 நபர்கள் சேலம் கிழமை நீதிமன்றத்தில் கையெழுத்திடும் நிபந்தனையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய வழக்கில், மனுதாரர்கள் 3 பேரும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் கையெழுத்திட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் பணியில் இருந்த ராணுவ வீரர் இறந்தார் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்  தியாகராஜன் சென்ற கார் மீது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் செருப்பு வீசிய சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர். சிலர் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.

 

இந்த வழக்கில் மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய 3 பேரும் தங்களுக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

 

இந்த வழக்கில் மூன்று நபர்களும் சேலத்தில் தங்கி சேலம் மாவட்டம் நீதிமன்றத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் மூன்று பேரும் சேலத்தில் தங்கி இருந்து மாவட்ட கோர்ட்டில் கையெழுத்து இட்டு வந்தனர்.

 

தற்போது சேலம் மாவட்டத்தில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மேற்கண்ட 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுதாரர் தரப்பில், சேலத்தில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது எனவே நிபந்தனையை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

 

இதனையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரும் சேலத்தில் தங்கி இருந்து கீழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவு மாற்றி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.

 



மற்றொரு வழக்கு














மதுரை, பேரையூர் பகுதியிலுள்ள எருத்துக்கொம்பூர் கால்வாய் விட்டல்பட்டி, குடிப்பட்டி, வந்தபுலி கிராமங்களில் செல்கிறது. இந்த கால்வாயில் பல பகுதி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில்,

12 வாரத்திற்குள் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை சட்டத்திற்கு உட்பட்ட அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கொண்டல்வண்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

அதில், "மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியிலுள்ள எருத்துக்கொம்பூர் கால்வாய் விட்டல்பட்டி, குடிப்பட்டி, வந்தபுலி கிராமங்களில் செல்கிறது இங்கு இந்த கால்வாயில் பல பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

இதனை அகற்ற பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுரை பேரையூர் பகுதியில் உள்ள நீர்நிலை வாய்க்காலிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது 12 வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 12 வாரத்திற்குள் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை சட்டத்திற்கு உட்பட்ட அகற்ற உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.