நெல்லை ராதாபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் மகேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "காவல்கிணறு விலக்கு பகுதியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு மற்றும் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு, வாழ்க்கை நடத்தி வருகிறோம். எங்களின் வாழ்வாதாரமே, இதனை சார்ந்தே உள்ளது. எங்கள் வீட்டின் முன்பாக கன்னியாகுமரி மாவட்டம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. எங்கள் வீட்டிலிருந்து 15 அடி முன்பாக, காவல்துறையினரின் சோதனைச் சாவடி அமைந்துள்ள நிலையில், சாலை விரிவாக்கத்திற்கு பின்னர் பின்னோக்கி நகர்த்தப்பட்டு எங்கள் வீட்டு கட்டிடத்தை ஒட்டி உள்ளது.

 


 


 

தற்போது காவல்துறையினர் சோதனை சாவடியை விரிவாக்கம் செய்து கட்டிடமாக கட்ட முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு அமைக்கப்பட்டால், எங்களது வீடு மற்றும் கடைக்கு வாகனங்கள் வந்து செல்ல இயலாத நிலை உருவாகும். இதே நெடுஞ்சாலையில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு சோதனை சாவடியை அமைக்காமல், எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வீட்டின் முன்பாக சோதனை சாவடி அமைக்கப்பட்டால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, நெல்லை மாவட்டம், காவல்கிணறு விலக்கு பகுதியில், தனிநபரின் வீட்டிற்கு முன்பாக காவல் துறையினர் சோதனைச்சாவடி கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்தும், சோதனைச் சாவடியை அகற்றவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 


 






 

இந்த வழக்கை  விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, " அந்த பகுதியில் வேறு இடங்கள் இருக்கும் போது தனிநபருக்கு இடையூறு செய்யும் வகையில் ஏன் சோதனைச்சாவடி கட்டிடம் அமைக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வழக்கு குறித்து, நெல்லை மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.