தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் விவசாயத்தில் செழிக்கும் விதமாக, முல்லைப் பெரியாற்றில் தேவையான நீர் இருப்பு இருக்கும் பட்சத்தில், முல்லைப் பெரியாற்று தண்ணீரை பிரித்து கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகள் பயன் பெறவும், பாசன வசதி பெறவும், 2008ஆம் ஆண்டு 18ஆம் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 18ஆம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த 18ஆம் கால்வாய் மூலம் சுமார் 40.80 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி, முல்லைப்பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது. மேலும், இக்கால்வாய் தண்ணீரை உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் நிரப்பி, நிலத்தடிநீரை பெருக்குவதோடு, நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் தேவையான நீர் மட்டம் இருக்கும் பட்சத்தில், தேனி மாவட்டம் மானாவாரி பயிர்கள் ஒரு போகம் பாசன வசதி பெற இந்த பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த 18ஆம் கால்வாயில் தண்ணீர் வரும் காலங்களில், கால்வாயை ஒட்டி உள்ள மக்கள் இந்த தண்ணீரில் குளித்து விளையாடி மகிழ்வது வழக்கம். மேலும், இந்த பதினெட்டாம் கால்வாய் தண்ணீர் செல்லும் பாதையான லோயர் கேம்பில் இருந்து கூடலூருக்கு செல்லும் வழியில் ஒரு பெரும் பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தை தண்ணீர் கடந்து செல்வதற்காக ஒரு பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் இந்த பாலம் தொட்டிப் பாலம் என அழைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்தது.
சமீப காலத்தில் இந்த தொட்டிப்பாலம் மிகவும் பிரபலமடைந்து, வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு குளித்து விளையாட மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த தொட்டி பாலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகிலும், சுரங்கனாரு அருவியின் அடிவாரத்தில் அமைந்துள்ளதாலும், இந்தத் தொட்டி பாலத்தில் இருந்து அருவியின் முழு அழகையும் ரசிக்க முடியும் என்பதாலும், மக்கள் அதிக அளவில் இங்கு வரத் தொடங்கினர். குறிப்பாக இளைஞர்கள் இங்கே பிறந்தநாள் விழா கொண்டாடுவது நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பது, மற்றும் அங்கேயே சமையல் செய்து சாப்பிடுவது என ஒரு சுற்றுலாத்தலம் போல நினைத்து, அதிக அளவில் இங்கு வருகின்றனர். இந்த தொட்டி பாலம் எவ்வளவு அழகு நிறைந்ததோ அதற்கேற்றார்போல் ஆபத்து நிறைந்ததாகவே உள்ளது. 30 முதல் 40 அடி உயரத்தில் இந்த பாலம் அமைந்துள்ளதால், பாலத்தின் மேலே குதித்து விளையாடுபவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், இது மக்கள் குளித்து விளையாடுவதற்கான இடம் இல்லை என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு வந்தது. மேலும் காவல் துறையின் சார்பாக தொட்டிப் பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தத் தடையை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து, தொட்டி பாலத்திற்கு வருகின்றனர். இதனால் பொதுப்பணித் துறை சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூடலூர் காவல் நிலையத்தில் இருந்து, சார்பு ஆய்வாளர் முகுந்தன் தலைமையிலான காவல்துறையினர், தொட்டிப் பாலத்திற்கு விரைந்து வந்து அங்கு குளித்து விளையாடுபவர்களை, எச்சரித்தும், அபராதம் விதித்தும் அனுப்பினர். மேலும் தொட்டிப் பாலத்தில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ அனுமதி இல்லை என்ற எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்பட்டது. தடையை மீறி தொட்டி பாலத்திற்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற