காவல்துறையினர் சுற்றி வளைத்துவிட்டதை அறிந்த கைதி விஜயகுமார் அரளி காய் என்ற விஷக்காயை சாப்பிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.




போக்சோ குற்றவாளி:


தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர், சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அடித்து தாக்கிய வழக்கில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கம்பம் அருகே கூடலூர் பகுதியில் மற்றொரு வழக்கிற்காக சிறை தண்டனை பெற்ற கைதி விஜயகுமாரை தேனி ஆயுதப்படை  காவலர்கள் இருவர் கடந்த 1 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் இருந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து வழக்கு விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டார்.




தப்பியோடிய குற்றவாளி:


மேலும் இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற பின் மாலையில் கைதி விஜயகுமாரை மதுரை மத்திய சிறையில் அடைக்க  நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்து வந்து டீ கடையில் கைதி மற்றும் காவலர்கள் டீ குடித்துக் கொண்டிருந்த போது காவலர்களை தள்ளிவிட்டு தப்பி ஓடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒளிந்து கொண்டார்.


இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் தப்பி ஓடிய சிறை கைதி விஜயகுமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து ஒரு ஆய்வாளர், உதவி ஆய்வாளருடன் 10 காவலர்கள் என ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு  கடந்த எட்டு நாட்களாக தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியான அகமலை, சொர்க்கம் வனப்பகுதி,  மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரள எல்லைப் பகுதிகளிலும்  தப்பி ஓடிய சிறை கைதியை தேடி வந்தனர்.


 




தற்கொலை முயற்சி:


இந்த நிலையில் தப்பி ஓடிய சிறை கைதி விஜயகுமார் போடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, தனிப்படை காவல்துறையினர் விஜயகுமாரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் தன்னை சுற்றி வளைத்து பிடித்து விடுவார்கள் என்று அறிந்திருந்ததை, அடுத்து சைடு விஜயகுமார் ஏற்கனவே பிடுங்கி வைத்திருந்த அரளிக்காய் என்ற விஷக்காயை சாப்பிட்டு  தற்கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து  கைது செய்யப்பட்ட கைதி விஜயகுமாரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனையில் காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.