இன்றும் நாளையும் இரு நாட்கள் குடியரசுதலைவர் திரௌபதி முர்மு தமிழகத்திற்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தரும் குடியரசு தலைவர் விமானநிலையத்தில் இருந்து காரில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகைதந்து பின்னர் கோயிலுக்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதனை தொடர்ந்து அழகர்கோயில் ரோடு பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவு உண்கிறார்.
குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கு விடுதிகளிலும், ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் மாற்றுவழியில் இயக்கப்படுகின்றன. இதேபோன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி 9 இடங்களிலும் , மதுரை கோரிப்பாளையம் முதல் அழகர்கோவில் சாலை வரை வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில் குடியரசு தலைவர் சாமி தரிசனத்தின் போது மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிது நேரம் நிறுத்திவைக்கப்படுவார்கள். குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோயில் வரை 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசு தலைவருடன் கவர்னர் ஆர்.என்.ரவியும் செல்கிறார். இதற்காக தற்போது சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார். அங்கேயே காந்திருந்து ஜனாதிபதியை வரவேற்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்