மதுரையில் பிசியான விளக்குத்தூண் பகுதியில் ஜிகர்தண்டா கடைக்கு அருகில் சாலை ஓரத்தில் 4 பெரிய சமையல் சட்டிகளுடன் அமர்ந்திருந்தார் ஜோசப். அவரிடம் ஒவ்வொரு பொட்டலமாக வாங்கிச் சென்றனர் வாடிக்கையாளர்கள். இரண்டு சட்டியில் கேழ்வரகு புட்டு, இரண்டு சட்டியில் அரிசி புட்டு. இரண்டும் சரிசமமாக 150 - நூற்றி ஐம்பது என தினமும் 300 பட்டு பொட்டலங்கள் கொண்டு வருகிறார். ஒரு பொட்டலம் 10 ரூபாய். குழந்தைகளுக்கு மட்டும் சில பொட்டலங்கள் 5 ரூபாய்க்கு கொடுக்கிறார். நள்ளிரவு எழுந்து மனைவியின் உதவியோடு பொட்டலங்களை மடித்து வைத்துக் கொண்டு, விற்பனை செய்கிறார்.





 

 

 



 

காலை 6 மணி முதல் வரை விற்பனை செய்கிறார். விரைவாக விற்றுவிட்டால் விற்பனை முடித்து வீட்டிற்கு சென்று விடுகிறார். விற்பனை தாமதமானல் கூடுதலாக சில மணி நேரம் அங்கேயே காத்திருக்கிறார். இவருக்கு லாரி லோடு மேன்கள் காவல்துறையினர் வரை எல்லாரும் வாடிக்கையாளர்கள். சிலர் காலை உணவாக புட்டை வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர். முக மலர்ச்சியோடு ஜோசப் தொடர்ந்து இந்த வேலை செய்துகொண்டிருக்கிறார். ஆரோக்கியமான புட்டை குறைந்த விலையில் விற்பனை செய்துவரும் ஜோசப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



 

புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த மீனாட்சி அக்காவிடம் பேசினோம், "காலையிலையே காகறி விக்கேய கிளம்பிருவோம் தம்பி. அரிசி புட்டு, கேப்ப புட்டு ஒவ்வொரு பொட்டலம் சாப்பிட்டா போதும் வயிறு கம்முனு கெடக்கும். கண்டது கடியதுகள சாப்புடுரதுக்கு சத்தான இந்த பொருள சாப்பிடலாம். காலையில கிளம்பு சமைக்கிறதுக்குள்ள டயம் ஆயிரும் அதனால எனக்கு எப்பவும் ரெண்டு புட்டு தான் காலை சாப்பாடு. ஜொசப் ஐயா ரெம்ப வருசம் வியாபாரம் பண்றதால வாடிக்கையா அவர்ட தான் புட்டு வாங்குவோம். புட்டுல குறை இருக்காது மணி, மணியா உதுரும்” என்று சிலாகித்தார்.