திண்டுக்கல் பழனி ரயில் நிலைய சாலையில் இந்தியா கூட்டணியில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு பேசினார். தற்போது சந்திக்க உள்ள 18 வது நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல, இந்தத் தேர்தல் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய தேர்தல். இந்தியா மதசார்பற்ற ஜனநாயகமாக நீடிக்கக் கூடிய தேர்தலாக உள்ளது எனவும், அதற்காகத்தான் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளதாக மக்களிடத்தில் தெரிவித்தார்.
மேலும் மோடி அரசாங்கம் ஜனநாயக முறைப்படி இந்த தேர்தலை சந்திக்க முடியாமல் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி தேர்தலை சந்திக்க நினைக்கிறது. இரண்டு மாநில முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் இருவரையும் கைது செய்து எதிர்க்கட்சிகளை சமாளிக்க திராணி இன்றி அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி என குற்றம் சாட்டினார். பத்து ஆண்டு காலம் மோடி அரசாங்கம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக கொள்கைகளைக் கொண்டு வந்துள்ளது.
விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள், தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகள், இளைஞர்களுக்கு சிறுபான்மையினருக்கு தலித் மக்களுக்கு எதிரான கொள்கையைத்தான் மோடி அரசு கொண்டு வந்தது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதன் விளைவாக டெல்லியில் பெரும் போராட்டத்தில் விவசாயிகள் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறினார். பாரதிய ஜனதா கட்சி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக இருந்தது என்பதற்கு உதாரணமாக தற்போது வெளிவந்துள்ளது தேர்தல் பத்திர ஊழல் என்றும், கார்ப்பரேட் கம்பெனிகளிடம் பாரதிய ஜனதா கட்சி 8,252 கோடி பெற்றிருக்கிறது.
பாஜகவுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையே இருந்த கள்ள உறவு இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை கொடுத்து பணமாக பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கிறது என குற்றம் சாட்டினார். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தோல்வி தழுவியது இந்த முறையும் அதுவே நடைபெறும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் உடைய பீட்டிமாக இருக்கக்கூடிய அதிமுக, பாமக முற்றிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் இந்தியா கூட்டணிக் கட்சிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சி பி எம் வேட்பாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.