மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபாதேவி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆர்ட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

 

அதில், "நான் எனது பெற்றோர் வீட்டில் மகள், மகனுடன் வசித்து வருகிறேன். எனக்கும், எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

 

இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி அன்று எனது வீட்டுக்குள் புகுந்த எனது கணவர், 3 வயது ஆண் குழந்தையை கடத்திச் சென்று விட்டார். இந்த நிலையில் அவன் நிலை என்ன என்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே, எனது 3 வயது குழந்தையை மீட்டு என்னிடம் ஒப்படைத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுதாரரின் கணவர் கண்ணதாசன், தனது 3 வயது குழந்தையுடன் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்.

 

அவரிடம் இருந்த குழந்தையை மனுதாரர் பிரபா தேவியிடம் ஒப்படைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

இந்த வழக்கு விசாரணை முடிவில், மனுதாரர் வீட்டில் உள்ள குழந்தைகளை தந்தை என்ற முறையில் கண்ணதாசன் வருகிற 2 வாரத்தில் 4 நாட்கள் சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.

 

இந்த வழக்கு வருகிற 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இரு தரப்பினரும் இந்த கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

இதனைத்தொடர்ந்து, குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக தந்தை நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

 



மற்றொரு வழக்கு















புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த அன்பரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், "தமிழ்நாடு அரசு நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்து அதில் மீட்கப்படும் இடங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

 

இதில் புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட இடங்களை பலருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது இதில் எனக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அரசு கொடுத்துள்ள இடத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து  பத்திர பதிவு செய்துள்ளனர். இந்த இடங்களை வாங்கிய பலர் இதை வணிக ரீதியில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் கிராவல் மணல் குவாரிகள் அமைத்து தனிம வளங்களை சட்டவிரோதமாக திருடி வருகின்றனர்.  இதனால் அரசின் நோக்கம் நிறைவேறாமலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியும் சட்ட விதிகளை மீறியும் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டது. எனவே, சட்டவிரோதமாக விற்பனை செய்த இடங்களை மீட்க வேண்டும் ட்ராவல் குவாரிகள் நடத்த தடை விதிக்க வேண்டும்.

 

இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட இடங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்." என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக அரசு இது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.