Pongal Vaikka Nalla Neram 2024 in Tamil: தமிழ்நாட்டில் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதத்தின் முதல் நாளை பொங்கல் பண்டிகையாகவும், அதற்கு அடுத்த நாளை மாட்டுப்பொங்கலாகவும், மூன்றாவது நாளை காணும் பொங்கலாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.
பொங்கல்:
உணவை அளிக்கும் விவசாயிகளை போற்றும் வகையில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையாக கோலாகலமாக தமிழ்நாட்டில் கொண்டாடி வருகிறோம். இரண்டாவது நாள் விவசாயத்திற்கு பெருமை சேர்க்கும் கால்நடைகளை போற்றும் விதமாக மாட்டுப் பொங்கலாக கொண்டாடி வருகிறோம்.
இந்த நிலையில், பொங்கல் திருநாளில் பொங்கல் எப்போது வைக்க வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தையும் ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர்த்த நேரங்களில் செய்தாலே அந்த காரியம் சிறப்பானதாக அமையும் என்பது ஐதீகம் ஆகும். பொங்கல் பண்டிகை நடப்பாண்டில் இன்று கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் வைக்கச் சிறந்த நேரம்:
தைப் பொங்கல் கொண்டாடப்படும் வரும் திங்கள்கிழமை (15ம் தேதி) காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலமும், காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை எமகண்டமும் வருகிறது. இந்த நேரம் தவிர்த்து அன்றைய தினத்தில் எப்போது வேண்டுமானாலும் பொங்கல் வைக்கலாம்.
சூரிய உதயத்தின்போது பொங்கல் வைத்தால் சிறப்பு என்று சொல்வது உண்டு. தைப் பொங்கலன்று காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரையும், காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரையும் பொங்கல் வைக்க மிகச்சிறந்த நேரம் ஆகும். பொங்கல் வைத்து வழிபடுவதற்கு இந்த நேரம் மிகச்சிறந்த நேரம் ஆகும்.
இந்த நேரத்தில், பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பானை பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் வைப்பார்கள்.
மாட்டுப் பொங்கல் வைக்க சிறந்த நேரம்:
உழவுக்கு உற்ற நண்பனாக விளங்கும் மாட்டைப் போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. வரும் 16ம் தேதியன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மாட்டுப் பொங்கல் கொண்டாட உகந்த நேரம் ஆகும்.
இந்த நேரத்தில் வீட்டில் வளர்க்கும் மாடுகளை அலங்கரித்து குங்குமம், சந்தனம் வைத்து அதை அலங்கரித்து வழிபடுவார்கள்.
தமிழ்நாட்டின் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையன்று மக்கள் வீடுகளின் வாயிலில் கரும்புகளும், தோரணங்களும் கட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம் ஆகும்.
தைப்பொங்கலின்போது வீட்டின் பூஜையறையில் சாமி படங்களுக்கு மாலையிட்டு, அதன்முன்பு வாழை இலையிட்டு அதில் பொங்கல் வைத்து வாழைப்பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைத்து வணங்க வேண்டும். அன்றைய தினம் மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவதும் வழக்கம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!