கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கூறியுள்ளார்.


கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், ஆடலும் பாடலும், ஒலிபெருக்கி போன்ற நிகழ்ச்சிகள் திருவிழாக்களில் ஏற்பாடு செய்திருந்தால் காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.


திருச்சுழி தாலுக்கா வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி கோரிய வழக்கில் திருவிழா நடத்த அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உட்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழாக்கள் பல ஆண்டுகளாக எந்த விதமான பிரச்சனைகள் இன்றி சுமுகமாக நடத்தி வருகிறோம்.


அதே போல் இந்த ஆண்டு கோவில் பொங்கல் திருவிழா 19.8.2022 முதல் 20.8.2022 வரை நடத்துவதற்கு கிராம மக்கள் அனைவரும் ஏற்பாடு செய்து வருகிறோம் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக அனுமதி வழங்க கோரி காவல்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. 


எனவே, திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில்  கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டாலோ, ஆடலும் பாடலும், ஒலிபெருக்கி போன்ற நிகழ்ச்சிகள் திருவிழாக்களில் ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்தார்.


இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கினை முடித்து வைத்தார்.




மற்றொரு வழக்கு


கருணை அடிப்படையிலான பணியை, தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனக்கோருவது அத்திட்டத்திற்கு எதிரானது. அதனை உரிமையாக கோர முடியாது.- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை


தேனியைச் சேர்ந்த பேபி ஷாலினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது தந்தை பாண்டி, 1999ஆம் ஆண்டு பணியில் இருந்த போது உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி 2006 
ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். ஆனால் அப்போது 18 வயதை பூர்த்தி ஆகவில்லை என மனுவை நிராகரித்து விட்டனர்.  இதனை எதிர்த்து மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவு பிறப்பித்தார்.  ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து கருணை அடிப்படையில் எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு, "கருணை அடிப்படையில் பணி கோருபவர்கள், பணியில் இருந்தவர் இறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டுமே தவிர வயது வரம்பு பூர்த்தி ஆகியதிலிருந்து அல்ல. ஆகவே மனுதாரர் தான் வயது  பூர்த்தி ஆனதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்துள்ளதாக கூறுவதை ஏற்க இயலாது.


மேலும் கருணை அடிப்படையிலான பணி என்பது இறந்தவரின் குடும்பத்தின் உடனடி பொருளாதாரத் தீர்வுக்காகத்தான். இதை வெகு காலம் காத்திருப்பில் வைக்க இயலாது. 


கருணை அடிப்படையிலான பணியை, தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனக்கோருவது அத்திட்டத்திற்கு எதிரானது. அதனை உரிமையாக கோர முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.