சித்த மருத்துவர்


திருச்சி பகுதியைச் சேர்ந்தவர் யோகநாதன் (வயது 55). இவர் பல வருடங்களாக சித்த மருத்துவம் செய்து வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சித்த மருத்துவம் பார்ப்பது மேலும் தொலைபேசி மூலம் அழைக்கும் நபர்களிடம் நேரடியாக சென்று வைத்தியம்  பார்த்தும் வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த சசிதரன் என்பவர் மருத்துவம் பார்க்க வேண்டும் என யோகநாதனுக்கு தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். இந்நிலையில் யோகநாதன் வியாழக்கிழமை காலை திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்துள்ளார்.




தாக்குதல்


அவருக்காக காத்திருந்த சசிதரன் மற்றும் அவரது நண்பர்கள் யோகநாதனை காரில் அழைத்துக்கொண்டு திண்டுக்கல் புறநகர் பகுதிக்கு கூட்டிச் சென்று லோகநாதனை தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். யோகநாதன் அவரது நண்பரிடம் தொலைபேசி வாயிலாக எனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் எனக் கூறியதை அடுத்து உடனடியாக அவரது நண்பர் 25 ஆயிரம் ரூபாய் யோகநாதன் வங்கிக் கணக்குக்கு பண பரிவர்த்தனை செய்து உள்ளார். இந்நிலையில் கடத்திய சசிதரன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்ததால் மேலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனக்கூறி சித்த மருத்துவரை தாக்கியுள்ளனர்.




சித்த மருத்துவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக தேவை எனக் கூறியுள்ளார். இந்நிலையில் சித்த மருத்துவரின் குடும்பத்தினர் உடனடியாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தொலைபேசி மூலம் புகார் அளித்து சித்தமருத்துவர் திண்டுக்கலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்தவரை பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சித்த மருத்துவரின் குடும்பத்தினர் என்று கூறி கடத்தியவர்களிடம் பேசி உள்ளனர். அவர்கள் இன்று காலை திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள பெரிய பள்ளிவாசல் பகுதிக்கு வர சொல்லி பணத்தை பெற்றுக் கொள்வதாக கூறி உள்ளனர்.




இந்நிலையில் காவல்துறையினர் சுற்றி வளைத்து சசிதரன் உட்பட மூன்று நபர்களை கைது செய்தனர். மேலும் திருப்பூரை சேர்ந்த இரண்டு பேரும் இதற்கு உடந்தையாக இருந்ததால் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்த மருத்துவர் பத்திரமாக மீட்கப்பட்டார். மேலும் கடத்தல் சம்பவத்தில் வேறு யாரும் தொடர்பு உள்ளதா? பணத்திற்காகத்தான் கடத்தப்பட்டாரா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண