தமிழ் மொழியின் பழமையும், தமிழர்களின் உலகிற்கு பறை சாற்றும் விதமாக கீழடி அகழாய்வும், அந்த ஆய்வின் மூலம் கிடைத்த பழங்கால பொருட்களும் உலகிற்கு வெளிகாட்டியுள்ளன. இந்த நிலையில், கீழடியில் அடுத்தடுத்த கட்டங்களாக 6 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது ஏழாவது கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.


சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக இந்த அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட காரணத்தினால் தற்போது மீண்டும் கீழடியில் அகழாய்வு பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.




கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று அகழாய்வு பணிகளையும், அகழாய்வில் கிடைத்த பொருட்களையும் நேரில் ஆய்வு செய்தனர். இந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணிகளில் கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் பழமையான ஈமக்காடு கண்டறியப்பட்டு, அங்கு இறந்தவர்களின் எலும்புகள், அவர்கள் வாழும்போது பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.


அகரம், மணலூர் மற்றும் கீழடியில் பண்டைய தமிழர்கள் காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் ஏராளமானவை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அகழாய்வு பணியில் தொல்லியல் துறையினருடன் இணைந்து பணியாட்களாக அந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த அகழாய்வு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கீழடியில்  நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


கீழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம் தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் மிகவும் தொன்மையானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கீழடியில் கிடைத்த பண்டைய பொருட்களை பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்வதற்காக அருங்காட்சியகம் ரூபாய் 12 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த சில வாரங்களுக்கு கீழடி அருங்காட்சியகத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையையும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், ரூபாய் 8 கோடி மதிப்பில் திருமலை நாயக்கர் அரண்மனை புதுப்பிக்கப்படும் என்று  கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.