பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மானம், சமூக நீதி ஆகியவற்றை மக்களிடையே பரப்பி தமிழகத்தில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பெரியார். பெரியாரின் பிறந்தநாள் விழா சமூக நீதி நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவனாம் தந்தை பெரியாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பெரியார் பிறந்தநாள் விழா சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி அறிவித்திருந்தார். பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.




இதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அருகே சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திமுக எம்எல்ஏக்கள் மரியாதை செய்தனர். தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் திமுகவினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி,  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்பூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு திமுக எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைபிடிக்கபட்டு வருவதையடுத்து திமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 



இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் சுந்தர்ராஜன், சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் உட்பட திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பெரியார் சிலைக்கு மரியாதை செய்தனர். இதே போல தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசின் சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் பெரியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரசின் சார்பில் மாவட்ட வாரியாக சமூகநீதிநாள் உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.