அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி நகர் மன்ற தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு நகர்மன்ற தலைவரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.


தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் சுமிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் மீனா தலைமையில் துவங்கியது. இக்கூட்டம் துவங்கியது முதல் நகர் மன்ற உறுப்பினர்கள்  தங்கள் பகுதியில் செயல்படுத்தப்படாத அடிப்படைத் தேவைகளை செய்யக்கோரி  கோரிக்கை விடுத்து வந்தனர்.




இந்நிலையில், பெரியகுளம் நகராட்சியின் 14வது வார்டு உறுப்பினர் சுதா நாகலிங்கம், அவருடைய பகுதியில் செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,  14வது வார்டு பகுதியைச் சேர்ந்த  30க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் தங்கள் பகுதி வார்டு உறுப்பினராக உள்ள சுதா நாகலிங்கம் தங்கள் பகுதிக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்றும், அதனால் தங்கள் வார்டுக்கு வேறொரு நகர் மன்ற உறுப்பினரை மேற்பார்வைக்கு அனுப்புங்கள் என  கூறி நகர் மன்ற தலைவர் சுமிதா இருக்கையை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




மேலும், நகர் மன்ற கூட்டத்தின் இடையே புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 14வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்  சுதா நாகலிங்கத்துடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உள்ளே புகுந்த பொதுமக்கள் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் கூட்டம் நடத்த முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டது .




இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மீனா நகர்மன்ற கூட்டத்தை இடையூறு செய்யும் வகையில் கூட்டத்தின் நடுவே உள்ள புகுந்து அநாகரிகமாக செயல்பட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுங்கள் என  கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்  நகர் மன்ற தலைவரிடம் கோரிக்கை மனுவை கொடுத்து நகர்மன்ற கூட்ட அரங்கை  விட்டு வெளியே சென்றனர். இதனைத் தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தில் பங்கேற்ற நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும்  கூட்டம் நடைபெறும் போது இது போன்று இடையூறுகள் செய்பவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் இது போன்ற நிகழ்வுகளால் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும் என தெரிவித்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.