பூரணம் அம்மா உங்களுக்கு மகள் இல்லை என்று நினைக்காதீர்கள், மகனாக எப்பொழுதும் நான் இருக்கிறேன் -மதுரையில் அன்பில் மகேஷ் பேச்சு
மதுரையில் நடைபெற்ற நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்ட மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ரூ.51,05,38,094 மதிப்பில் ஒப்புகைக் கடிதங்களை தொழில்துறையினர், கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நம்ம ஸ்கூல் நம்மஊரு பள்ளி திட்ட நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை கொடையாக வழங்கிய வங்கி ஊழியர் கொடையாளர் ஆயி பூரணம்மாளை பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதேபோன்று தான் பயின்ற மாநகராட்சிப் பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கிய பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையாவையும், மதுரை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த 1.81கோடி நிதி அளித்த அப்பள வியாபாரியான 86 வயது முதியவர் இபிகே ராஜேந்திரனையும் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் நம்ம ஊரு, நம்ம ஸ்கூல் நிகழ்ச்சி மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ளது தனியார் விடுதியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது," மதுரையில் மேலும் எங்களுடைய பள்ளிக்கு சிறப்பு ஏற்படுத்தும் வகையில் தமிழ், உழைப்பு, ஈகை அமர்ந்திருக்கிறது. அவை வேறு எதுவுமில்லை. சாலமன் பாப்பையார், அப்பளம் வியாபாரி ராஜேந்திரன், ஆயி பூரணம் அம்மாள் ஆகியோர்தான்.
அம்மா உங்களுக்கு மகள் இல்லை என்று நினைக்காதீர்கள்,மகனாக எப்பொழுதும் இந்த அன்பில் மகேஷ் பொய்யா மொழி இருப்பேன்.
தொழிலதிபர் வேணு சீனிவாசன் 2500 கிராமங்களை தத்து எடுத்து இருக்கிறார், எனது கிராமமான அன்பில் கிராமத்தையும் அவர்தான் தத்து எடுக்கிறார். வேணு சீனிவாசனை சிறு வயதில் தூரத்தில் நின்றும் போட்டோவிலும் பார்த்து இருக்கிறேன். இன்று அவர் அருகில் இருப்பது எனது பாக்கியம். நம்ம school, நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாகவும் உதவலாம்’’ என்று அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.