பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. புதிய சிடி ஸ்கேன் இயந்திரத்திற்கு பதிலாக பழைய சிடி ஸ்கேன் இயந்திரம் இறக்கப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு. இதுகுறித்து இணை இயக்குனரிடம் விளக்கம் தர வேண்டும் மற்றும் இயந்திரம் வாங்கியதற்கான பில்லுகளை வழங்க வேண்டும் என குழு தலைவர் உத்தரவு.
தேனி மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் கட்டுமான பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக சிடி ஸ்கேன் இயந்திரம் பொருத்தப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. புதிதாக மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிடி ஸ்கேன் மையத்தை சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 2 கோடி ரூபாய்க்கு புதிதாக சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களை கேட்ட பொழுது ஆவணங்கள் அனைத்தும் பழைய எந்திரத்திற்கான ஆவணங்களாக காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆய்வின் தலைவர் வேல்முருகன் அங்கு இருந்த மருத்துவத்துறை இணை இயக்குனரிடம் கலைச்செல்வியிடம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு புதிய சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்கு தான் அரசு நிதி ஒதுக்கி உள்ளது ஆனால் இங்கு பழைய இயந்திரம் நிறுவப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பினார்.
அரசு மருத்துவமனைக்கு புதிய சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்காமல் முறைகேடில் நடந்துள்ளதா? என கேள்வி எழுப்பினார். மேலும் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வாங்கப்பட்ட புதிய சிடி ஸ்கேன் இயந்திரம் எந்த மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது தற்பொழுது எங்கு உள்ள இயந்திரம் எந்த அரசு மருத்துவமனையில் பயன்பாட்டில் இருந்தது என ஆவணங்குடன் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மேலும் புதிதாக கட்டப்பட்டு அவசர சிகிச்சை மருத்துவமனை வளாகம் மற்றும் பிசியோதெரபி மையம் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டதோடு உள்நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடமும் மருத்துவமனையின் சிகிச்சை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திமுக, பாமக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.