கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், குறைந்த வட்டியில் தங்க நகை அடமான கடன்களை வழங்குகின்றன.


அவை 2011 முதல் 2020 டிசம்பர் வரை, 6.60 கோடி பேருக்கு 2.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, நகை கடன் வழங்கியுள்ளன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியாக, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை, அக்கட்சி கடந்த நாடாளுமன்ற  தேர்தலின் போதும் அறிவித்திருந்தது. இதனால், கூட்டுறவு நிறுவனங்களில், 2018-19, 2019-20, 2020-2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகை கடன் விபரங்களை அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.



இந்நிலையில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் பணிபுரியும் அதிகாரிகள், நகை கடன் வைத்துள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதார் எண் மற்றும் நகை கடன் வைத்த போது வழங்கிய அசல் ஆவணங்களை எடுத்து வருமாறு கூறி வருகின்றனர். இதனால் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த நயினார் கோயில் மற்றும் முதுகுளத்தூர் அருகே  கமுதி ஆகிய கூட்டுறவு கடன் சங்கங்களின் முன்பு தாங்கள் அடகு வைத்த நகைகளை கேட்டு பொதுமக்கள் சுவர் ஏறி குதித்து அங்கிருந்த அதிகாரியிடம் கடனை தள்ளுபடி செய்து உடனே எங்கள் நகையை தாருங்கள் என தகராறு செய்த  சம்பவம் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


பரமக்குடி தாலுகா நயினார்கோவில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை தள்ளுபடி செய்வதற்க்கான ஆவணம் வாங்கும் பணிகள்தான்  நடக்கிறது. இந்த நிலையில்,   ஆளுங்கட்சியினர், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல நகை கடன் தள்ளுபடி செய்து நகைகளை திரும்ப தருவதாக யாரோ கிளப்பிவிட்டதால் பொதுமக்கள் வங்கிமுன் கூடிய கூட்டத்தை  வங்கி ஊழியர்களால் கட்டுப்படுத்தமுடியாமல் திக்குமுக்காடிப்போன அவர்கள்,  வங்கியின் முன் கேட்டை பூட்டிவிட்டு நகைக்கடன் தள்ளுபடிக்கான விண்ணப்ப ஆவணங்கள் மட்டுமே பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளனர். பின்னர் ஐந்து  நபர்களாக உள்ளே அனுமதித்துள்ளனர். இவ்வளவு எடுத்துக்கூறியும் பொதுமக்கள் பொறுமை காட்டாமல் வங்கியின் தடுப்பு சுவர்மேல் ஏறி உள்ளே செல்ல முயன்றனர்.



கொரோன முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகப்படியான பொதுமக்கள் கூடுவதால் கொரோனோ பரவும் அச்சமும் எழுந்தது. எனவே,  மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு முறையான பாதுகாப்பு வளையம் அமைத்து விதிமுறையை பின்பற்றவேண்டும் என பொதுமக்கள் மத்தியில்  கோரிக்கையும் எழுந்துள்ளது.


இதே போன்று கமுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி என வதந்தி பரவியதையடுத்து, கமுதியில் உள்ள ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கமுதி கிளை முன்பாக விவசாயிகள் தாங்கள் அடகு வைத்துள்ள நகை கடன் அட்டை, ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் காலை 9 மணியிலிருந்து மாலை வரை 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வங்கியில் முன்பாக சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக் கவசங்கள் அணியாமல் குவிந்ததால் கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால் கமுதி- சாயல்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.