கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் போலியாக மருத்துவம் பார்த்த 56 வயது  பெண்மணி கைது,போலியாக மருத்துவம் பார்த்ததால் பக்கவிளைவுகளுடன் நோயாளிகள்  தனியார் மருத்துவமனையில் அனுமதி.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை, பூண்டி, கூக்கால், கிளாவரை, குண்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை மற்றும் ஆராம்ப சுகாதார நிலையம் இல்லாத காரணத்தினால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள்  கொடைக்கானல், மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு  வந்து சிகிச்சை பெற்று திரும்ப வேண்டும். இப்பகுதியில் போதுமாக அடிப்படை வசதிகள் இல்லாத  நிலையில்  மலை கிராமங்களில் மருத்துவம் பார்ப்பதற்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் இல்லாததால் மருத்துவர்களிடம் செவிலியராக பணிபுரிந்த சிலர் அப்பகுதியில் கிராம மக்களை குறி வைத்து வீடு வாடகைக்கு எடுத்து மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து, மாத்திரைகளை தனியார் மெடிக்கல்களில் வாங்கி போலியாக அரை குறை மருத்துவம்  பார்த்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.



இதில் பூண்டி பகுதியை சேர்ந்த  சந்திரன்(55) , நாகராஜ்(45) ஆகிய இருவர் காய்ச்சல் மற்றும் அட்டை பூச்சி கடித்தற்கு கடந்த 5 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த தேவி என்பவரிடம் மருத்துவம் பார்த்து ஊசி போட்டுள்ளனர். இதில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஊசி போடப்பட்ட இடுப்பு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு காயமாக  மாறியுள்ளது, இதனையடுத்து இந்த இருவரும் கொடைக்கானல்  தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர் . இதனை அறிந்த கோட்டாட்சியர் காவல் துறைக்கு புகார் அளிக்கவே பூம்பாறை மலை கிராமத்தில் பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்து கொண்டிருந்த  தேவியின் தோழியான மோகினி(56) என்ற பெண்ணை  கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து அவரது வீட்டில் இருந்த மருத்துவம் பார்ப்பதற்கு  பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தும் முறையான மருத்துவம் தெரியாமல் மருத்துவம் பார்த்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தொற்று நோயை தெரியாமல் பரப்புவது ,தொற்று நோயை தெரிந்தே பரப்புவது, ஏமாற்றுதல், போலியாக மருத்துவம் பார்ப்பது  உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் மலைகிராமங்களில் போலியாக மருத்துவம் பார்த்து வரும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்  என காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவருக்கு  நரம்புகள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டுவருவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார், இதே போன்று போலியாக மருத்துவம் பார்த்ததால் 80 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்களால் கூறப்படுகிறது.



தற்போது கொரோனா வைரஸ்சின் தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில் இது போன்று போலியான மருத்துவர்கள் ஊருக்குள் ஊடுருவி இருப்பதை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கையும் எழுந்துள்ளது.