கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாம்பன் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென அபாய ஒலி எழுப்பப்பட்டது.  இதனை அடுத்து ரயில்வே பொறியாளர்கள் ரயில் போக்குவரத்தை நிறுத்தினர். இந்த  நிலையில் ரயில்வே பொறியாளர்கள் சென்னை ஐஐடி வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழு கடந்த சில நாட்களாக ரயில் பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பயணிகள் இல்லாத காலி ரயில் பெட்டிகளை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் பாம்பன் ரயில் பாலத்தில் சில பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியது கண்டுபிடிக்கப்பட்டது.






இதனை அடுத்து வரும் ஜனவரி 10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஜனவரி 10ம் தேதி வரை மண்டபம் வரை மட்டுமே ரயில்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.



அதே போல் பரமக்குடி - சத்திரக்குடி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரம் மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.00 மணிக்கு புறப்படும்.



 

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தற்போது ராமேஸ்வரம் - மதுரை ரயில்கள் இராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. எனவே இந்த ரயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் காலதாமதமாக மதியம் 01.05 மணிக்கு புறப்படும்.