பயிறு வகை பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரித்திட உயிர் உரமான ரைசோபியம் பெரும் பங்கு வகிக்கின்றது. ரைசோபியம் என்பது பாக்டீரியா வகையை சார்ந்த நுண்ணுயிர் உரம் ஆகும். ரைசோபியம், பாக்டீரியா வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை தாவரங்களுக்கு கிடைக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ரைசோபியம் பாக்டீரியா, செடிகளுடைய வேர்களினால் சுரக்கப்படும். ஒரு வகை வேதிப்பொருட்களினால் ஈர்க்கப்பட்டு வேரில் உட்புகுந்து பயிறு வகை பயிர்களின் வேர்களில் வேர்முடிச்சுகளை ஏற்படுத்துகிறது. ரைசோபியம் பாக்டீரியாவால் உள்ள நைட்ரோஜினேஸ் நொதியானது வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை அம்மோனியாவாக மாற்றுகிறது. அனைத்து பயிர்களும் வளிமண்டல நைட்ரஜனை அமோனியாவாகவும் நைட்ரேட்டாகவும் கிரகித்துக் கொள்கிறது.


 






ரைசோபியம் பாக்டீரியா எக்டருக்கு 450 கிலோகிராம் நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தும் திறன் கொண்டது. ரைசோபியர் உயிர் உரத்தில் ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் ரைசோபியம் (பயறு) என இரண்டு வகைகள் உள்ளன. ரைசோபியம் (பயிறு) உயிர் உரமானது அனைத்து வகையான பயிறு வகை பயிர்களிலும் (உளுந்து, பச்சைபயறு, தட்டைபயறு, கொண்டைகடலை, கொள்ளு, துவரை), ரைசோபியர் (நிலக்கடலை) எண்ணெய்வித்து பயிர்களான நிலை கடலையில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ரைசோபியம் உயிர் உரத்தினை பயன்படுத்துவதினால் செடிகளின் வேர் வளர்ச்சியும், செடிகளின் வளர்ச்சியும் மேம்படுத்தப்படுவதுடன் மகசூலும் அதிகரிக்கப்பட்டு மண்ணில் வளம் பாதுகாக்கப்படுகிறது. ரைசோபியம் உரங்கள் தற்போது வேளாண்மைத்துறையின் மூலம் திண்ம பவுடர் வடிவிலும் மற்றும் திரவ வடிவிலும் வழங்கப்படுகிறது.


 


 




திண்மா வடிவில் உள்ள ரைசோபியம் விதை நேர்த்தி;


ஒரு எக்டருக்கு தேவையான பயிறு வகை விதைகளுடன் 3 பாக்கெட் அல்லது 600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தினை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து உயிர் உரமானது விதையுடன் நன்றாக படும்படி செய்து நிழலில் 30 நிமிடங்கள் உலர்த்தி பின் விதைப்பு செய்யலாம். ரைசோபியம் உயிர் உரம் 10 பாக்கெட்டினை அல்லது 2 கிலோ உயிர் உரத்தினை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து விதைப்புக்கு முன் வயலில் இடவேண்டும். திரவ உரத்தை உபயோகிக்கும் முறைகள்; திரவ ரைசோபியம் 50 மில்லியை ஒரு லிட்டர் ஆறிய அரிசி கஞ்சியுடன் ஒரு ஏக்கருக்கான விதையை கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்பு செய்யலாம். திரவ உயிர் உரம் 150 மில்லியை தேவையான நீரில் கலந்து நாற்றின் வேர்கள் நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்து பின்னர் நடவு செய்யலாம். திரவ உயிர் உரம் 200 மில்லியை மத்திய தொழு உரத்துடன் நன்கு கலந்து விதைப்புக்கு முன்னர் வயலில் இடவேண்டும். திரவ உயிர் உரத்தின் ஒரு மில்லியை ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து விதைப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து 15, 30 மற்றும் 45 நாட்களில் தெளிக்கலாம்.


 


 




ரைசோபியம் உயிர் உரத்தின் பயன்கள்; உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தினை நேரடியாக தாவரங்களுக்கு வழங்குகின்றன. பயிர் வளர்ச்சியினை தூண்டும் ஹார்மோன்கள் உயிர் உரங்களின் செயல்பாட்டின் மூலம் கிடைக்கின்றது. பயிர்களின் வேர்ப்பகுதியில் பிற நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தினை ஊக்குவிக்கின்றது. பயிர்களில் மண்ணின் மூலம் பரவும் நோய்களின் காரணிகளை சிறப்பாக கட்டுப்படுத்துகின்றன. மண்ணில் மக்கின் அளவை சீராக பராமரிப்பதால் மண்ணின் நயம் மற்றும் மண்வளத்தை பாதுகாக்கின்றது. உயிர் உரங்கள் பயன்பாடு வேளாண்மையில் சாகுபடி செலவை குறைப்பதோடு ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைக்கிறது.


 




 


பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை; உயிர் உரங்களை ரசாயன உரங்களுடனோ அல்லது வேறு மருந்துகளுடனோ கலந்து உபயோகிக்க கூடாது. உயிர் உரங்களை பயன்படுத்துவதற்கு முன் வெளிச்சம் இல்லாத இடத்தில் பாதுகாக்க வைக்க வேண்டும். உயிர் உரங்களை காலவாதி காலத்திற்குள் பயன்படுத்திட வேண்டும். உயிர் உரங்கள் இட்ட இடங்களில் உடனடியாக பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் வழங்கப்படும் ரைசோபியம் உயிர் உரத்தினை விவசாயிகள் அனைவரும் பெற்று பயன் பெறலாம்