திரிசுதந்திரர்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திருச்செந்தூர் ஸ்ரீஜெயந்திநாதர் திரிசுதந்திரர் காரியஸ்தார் ஸ்தானிகர் சபா தலைவர் நாராயணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் கோயில் வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிவிப்பாணையை அறநிலையத்துறை ஆணையர் கடந்த ஏப்ரல் 1ல் வெளியிட்டார். அதில், கைங்கர்யம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்களை கோயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். குற்ற வழக்கில் தண்டனை பெறவில்லை என உறுதி மொழியும் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை தாக்கல் செய்ய வேண்டும். இதை பரிசீலித்து தகுதியின்மை ஏதுமில்லை என்றால் நிபந்தனைக்கு உட்பட்டு அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டும் கைங்கர்யம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

 

ஒரு நாளைக்கு 100 திரிசுதந்திரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். திரிசுதந்திரர்கள் குறையை போக்கிட மாதம் ஒரு முறை குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றி ஆண்டுதோறும் அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், எங்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படும். எங்களது உரிமையில் தலையிடும் வகையில் உள்ளது. எனவே, அறநிலையத்துறை ஆணையரின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், சுவாமிநாதன், நிர்மல்குமார் அடங்கிய சிறப்பு அமர்வு,  ‘‘திருச்செந்தூர் கோயிலுக்கு தினசரி பல்லாயிரம் பேர் தரிசனம் செய்கின்றனர். எந்தவித இடையூறும் இன்றி, அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். கோயிலுக்குள் எந்தவித விரும்பத்தகாத நிகழ்வும் நடக்கக் கூடாது. கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக அறநிலையத்துறை ஆணையர் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளார். ஆனால், இதற்காக பதிவு பெற்ற அமைப்பான திரிசுதந்திரர்களுக்கு எந்தவிதமான நோட்டீசோ, விளக்கமளிக்கவோ வாய்ப்பளிக்கவில்லை. தொழில்நுட்ப காரணங்கள் அடிப்படையில் அவசரகதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரம் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அறநிலையத்துறை விதியின் கீழ் தேவையான நடவடிக்கையை சுதந்திரமாக முடிவெடுக்க ஆணையருக்கு அதிகாரம் உண்டு. இதற்காக விதிகளை பின்பற்றி முறையாக புதிதாக உத்தரவுகளை பிறப்பிக்கலாம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

 

 





தமிழ்நாடு மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி முடிவு எடுப்பதற்கு தடை விதித்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின்சாரம் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. இந்தநிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.


இந்த வழக்கை விசாரித்து தனி நீதிபதி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக மின்வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மின்வாரியம் சார்பிலும், எதிர்தரப்பினர் சார்பிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற செப் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.