தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா. இவர் மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை 2013-ல் கொலை செய்த வழக்கில் கட்டை ராஜா கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனையும், கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக கீழமை நீதிமன்றம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகம், செல்வம் ஆகியோர் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வில் விசாரணை செய்யப்பட்டது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கட்டை ராஜாவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டார். இதேபோல் கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்து உத்தரவிட்டார்.
தனியார் பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை மண்டல அதிகாரிக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு தனியார் பேருந்தை இயக்கி வருகின்றேன். எனது பேருந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதியம் 3:24 மணிக்கு புறப்பட தமிழக அரசு போக்குவரத்து கழகம் நேரம் ஒதுக்கி உள்ளது.
இதேபோல் எனக்கு அடுத்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூருக்கு செல்ல வேண்டிய பேருந்து மதியம் 3:54 மணிக்கு புறப்பட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே 3:14 இயக்கப்படுவதால் எனக்கும், மற்ற அரசு பேருந்துகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தனியார் பேருந்துகள் அரசால் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு, ஆவணங்களின்படி சரியாக உள்ளதால் தனியார் போருந்துகள் உரிய நேரத்தில் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கரூரைச் சேர்ந்த சுவாமி அப்பன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு, " மனுதாரர் அரசு நிர்ணயித்த நேரத்திற்கு முன்பே தனது பேருந்தை இயக்குவதாக ஒப்புக்கொண்டு உள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவது குறித்து அனைத்து உரிமையாளர்களிடமும் கலந்து பேசி உரிய முடிவெடுக்க உத்தரவிட்டனர்.