விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர்  சிலைகள் வைக்கவும்,  விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும்  நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கவும் மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கோரி பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கின் தன்மையை பொறுத்து, தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் கீழ் கண்ட நிபந்தனைகளைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

 

விநாயகர்  ஊர்வலத்தின் போது  பங்கேற்பாளர்கள் எவராலும் ஆபாச நடனமோ, பேச்சோ இருக்கக்கூடாது. எந்த அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிட்டு  நடனம், பாடல்கள் எதுவும் இசைக்கக்கூடாது, மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் நிகழ்ச்சி இருக்க கூடாது. விநாயகர் சதுர்த்தி  ஊர்வலத்தின் போது  பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதை  பொருட்களையோ மதுபானங்களையோ உட்கொள்ளக்கூடாது.

 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும்  அசம்பாவிதம் நடந்தால், மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள்  பொறுப்பாவார்கள். விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுத்து, திருவிழாவை நிறுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு சுதந்திரம் உண்டு. இந்த நிபந்தனைகளுடன் உரிய அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

 



மற்றொரு வழக்கு

 




பணியில் உள்ள மருத்துவர்களுக்கு, முதுநிலை கல்வியில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழக அரசுத் தரப்பில் மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், " அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 16ஆம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இடங்களில் ஏற்கனவே மருத்துவப் பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என உள்ளது. இதை எதிர்த்து ஸ்ரீநிதி உள்ளிட்ட பலர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். அரசு தரப்பில் பதில்மனுவை தாக்கல் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே முதுநிலை கல்வியில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.