திருப்புவனம் திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் பதினோராம் நூற்றாண்டு பைரவர் சிலை மற்றும் சூலக்கல்லை சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன் அடையாளம் கண்டுள்ளனர். இதுகுறித்து கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது: திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஐயப்பன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக்குழுவினர் திருப்பாச்சேத்திக்கு வடகிழக்கு பகுதியில் வைகை கரையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மழவராயனேந்தல் வடக்கு வாச் செல்லி உத்தம நாச்சியம்மன் கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம்.



 

பதினோராம் நூற்றாண்டு பைரவர் சிலை.

 

வடக்கு வா செல்லி உத்தம நாச்சியம்மன் கோயிலில் என்ன சிலை என்று தெரியாமல் ஒரு சிலை வணங்கப்படுவ தாகவும் அச்சிலையை அடையாளம் காணுமாறும் தெரிவித்ததின் அடிப்படையில் மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அவர்களின் உதவியுடன் அச்சிலை பைரவர் சிலை என்றும் அது பதினோராம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.



 

பைரவர் சிலை

 

சிவ மூர்த்தங்கள் 64 னுள் ஒன்றாக பைரவர் வடிவமும் உள்ளது. பொதுவாக பைரவர் சிலை நின்ற கோலத்தில் சூலம், உடுக்கை, பாசக்கயிறு போன்றவற்றை கையில் வைத்திருப்பதோடு நிர்வாணக் கோலத்தில் நாய் வாகனத்தோடும் அமைக்கப்பட்டிருக்கும். இங்கே காணப்படும் பைரவர் இரண்டு கைகள் மட்டுமே உடையதாகவும் ஒரு கை இடுப்பிலும் மற்றொரு கை அருள்பாலித்த வடிவிலும் காட்டப்பட்டுள்ளன. கழுத்து மற்றும் இடையில் ஆபரணங்கள் காணப்படுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலையாக இருப்பதால் முகம்  மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.



 

காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோயில்.

 

இக்கோவிலுக்கு அருகில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் நிர்வகிக்கும் காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட நிலப்பகுதியில் முன்னாளில் கபாலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகவும், தற்போது சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோயில் என்ற பெயரில் பழைய சிவன் கோவில் ஒன்று இருந்து முற்றிலும் அழிவுற்ற நிலையில் அவ்விடத்தில் பழமையான நந்தி சிலை மற்றும் ஆவுடை இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளன. அங்கிருந்தே இந்த பைரவர் சிலை காலப்போக்கில் வடக்கு வா செல்லி உத்தம நாச்சியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்திருக்கலாம்.

 



 

சூலக்கல் வழிபாடு.

 

சிவன் கோயிலுக்குரிய நிலங்கள் எல்லை அளவிட்டு அடையாளப்படுத்த சூலக்கல் நடப்பட்டிருக்கும். அவ்வாறான சூலக்கற்கள் மக்கள் வழிபடும் கடவுளாகவும் மாறிப்போயிருக்கின்றன. வடக்கு வா செல்லி உத்தம நாச்சியம்மன் கோயிலில் சூலக்கல் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. சிவன் கோயிலுக்கு அளவிட்டு வழங்கப்பட்ட எல்லைக்கல்  எங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு நடப்பட்டு பின்பு வழிபாட்டுக்கு உரியதாக மாறி இருக்கலாம். பழமையான சிலை மற்றும் சூலக்கல் அடையாளம் காணப்பட்டதில் சிவகங்கை தொல்நடைக் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இவ்வாறு கூறினார்.