தூத்துக்குடியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் தூத்துக்குடி இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் வெயிலா ராஜா வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேசன் கூடுதல் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ஆன்லைன் மூலம் கலந்துகொண்டு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , ”தரைவழி போக்குவரத்து, ரெயில் வழி போக்குவரத்து, கடல் வழி போக்குவரத்து, ஆகாய வழி போக்குவரத்து என நான்கு வழி போக்குவரத்து மார்க்கங்கள் கொண்டது சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தான். இந்த மாவட்டம் தொடர்ந்து தொழில்துறையில் வளர்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருகிற 19-ந் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் ரூ.400 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக அதிக நீளம் கொண்ட ஓடுதளம் தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைய உள்ளது. இதன் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும்” என்றார்.
இஸ்ரோவின் திறன் மேம்பாடு மற்றும் பொதுமக்கள் தொடர்பு பிரிவு இயக்குனர் சுதீர் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், “குலசேகரன்பட்டினத்தில் அனைத்து சிறிய வகை செயற்கை கோள் ஏவுவதற்காக ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து உள்ளது. விரைவில் கட்டுமான பணிக்கான டெண்டர் கோரப்படும். 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவுதளம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
இங்கு ராக்கெட் ஏவுதளம் அமையும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ராக்கெட் ஏவுதளம் கட்டுமானம் தொடங்கும் போது, அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தேவையான வீடு அமைத்தல், போக்குவரத்து போன்றவற்றில் வேலைவாய்ப்பு கிடைக்கும். கட்டுமானம், எலக்ட்ரிக்கல் போன்றவற்றிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வரும் போது சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும்.
இதற்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி வெளியில் உள்ள பெரிய நிறுவனங்கள் கூட, இந்த பகுதியில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து பொருட்களை உற்பத்தி செய்வார்கள். ஆகையால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும். இதற்காக அவர்கள் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாங்களும் எங்கள் ஆதரவை கொடுப்போம்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய ககன்யான் திட்டம் இஸ்ரோவின் ஒரு லட்சிய திட்டம் ஆகும். அந்த திட்டம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு ரோபோக்களை அனுப்பி சோதனை செய்யப்படும். அதனை தொடர்ந்து மனிதர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்”என்றார்.