திண்டுக்கல் மாவட்டம் மாலப்பட்டி அடுத்துள்ள சங்கணம்பட்டி மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கருப்பையா, கங்காதரன் சிரஞ்சீவி ,முருகேசன், மற்றொருவரும் முருகேசன் இவர்கள் அனைவரும் ஒன்றாக அப்பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வருகின்றனர். திண்டுக்கல் திருமலைக்கேணி சாலையில் உள்ள முத்தனம்பட்டி பகுதியின் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபானம் வாங்கி கூட்டாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.



இந்நிலையில் மதுபானம் சற்று தீர்ந்தபோது மேலும்  மதுபானம் வாங்குவதற்கு தனித்தனியாக பணம் பங்கு போட வேண்டும் என்று பேசி பணம் பங்கீடு செய்ய செய்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் தகராறின்றி அவர்கள் பணத்தைப் பங்கீடு செய்து மீண்டும் மதுபானம் வாங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மீண்டும் மது அருந்தி உள்ளனர். மதியம் முதல் மாலை வரை மதுபானம் தொடர்ந்து மது அருந்திய அவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் சிரஞ்சீவி மற்றும் அவரது சகோதரர் முருகேசனும், கருப்பையா ,கங்காதரன் ஆகியோருக்கும் மது வாங்க பணம் கொடுப்பது தொடர்பாக திடீரென இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் தகராறாக முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் சிரஞ்சீவி அவரின் சகோதரர் முருகேசன் மற்றொரு முருகேசன் ஆகியோர் சேர்ந்து கருப்பையா மற்றும் கங்காதரனை கத்தியால் குத்தியதில் கருப்பையா படுகாயமடைந்தார்.



இந்நிலையில் அருகே இருந்தவர்கள் கருப்பையாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதில் காயமடைந்த கங்காதரன் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்திய சிரஞ்சீவி அவரது சகோதரர் முருகேசனும் மற்றொரு முருகேசனும் சம்பவ இடத்தை விட்டு தப்பியோடினர். சம்பவம் அறிந்த திண்டுக்கல் போலிசார் கத்தியால் குத்திய மூவரையும்  கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட்ட மூவரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய நபர்கள் வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனினும் மதுபானம் அருந்துவதற்கு கூட்டாக சேர்ந்து மது அருந்தும் போது இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவருகிறது. ஊரடங்கு உத்தரவுகளில் கடந்த 1 மாதமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் எந்த வித அசம்பாவிதங்கள் நடக்காதவண்ணம் இருந்த நிலையில் டாஸ்மாக் கடை திறந்த ஒரு சில தினங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத சம்பவங்களும், கொலை வழக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.