சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதேபோன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை என்ற சொல்லக்கூடிய என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் இதனையடுத்து பல்வேறு நிர்வாகிகளை விசாரணைக்காக அழைத்துச் சென்று தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.



 

இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதில் தொடர்ந்து செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக என்ஐஏ  அதிகாரிகள் தமிழகத்தின் சென்னை, மதுரை, தேனி, திருச்சி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகியும், முன்னாள் SDPI கட்சி நிர்வாகியுமான அப்பாஸ் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை முதலாக சோதனை நடத்திய பின்பாக அப்பாஸ் என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.



 

இதே போன்று தெப்பக்குளம் பகுதியில் உள்ள தமிழன் தெரு பகுதியில் யூசுப் என்பவரது வீடு மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளுடன் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி சென்றனர்.  இதனை தொடர்ந்து அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துசென்றனர். சோதனை நடத்திய போது பாதுகாப்பு கருதி அந்தந்த பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவித்து வைக்கப்பட்டிருந்தனர் . இதனையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய போது சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.