தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வரும் நிலையில், இதில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத்தேர்வுகளை தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில் 14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் பங்கேற்று விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் மே 7 ஆம் தேதி இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆக, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கலாம் என பலரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு அரசு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 95.84% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 ஆயிரம் ஆண் மாணவர்களும், 17306 பெண் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் விபத்து ஏற்பட்டு கைகாலில் காயங்கள் எற்பட்ட போது கடினமாக படித்த மதுரையைச் சேர்ந்த மாணவி 543 மதிப்பெண் எடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுத்த படுக்கை:
மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி நம்மிடம்,” திருமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். என் அப்பாவும், அம்மாவும் கூலித் தொழிலாளிகள். இந்த சூழலில் நானும் என் தங்கையும் அரசுப் பள்ளியில் படித்தோம். தங்கை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன் வீட்டு மாடியில் துணி எடுக்க சென்ற போது எனது கால்கள் தடுமாறி மாடியில் உருண்டு விழுந்துவிட்டேன். அப்போது என் கால், கைகளில் பலமாக காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் முழுமையாக முடங்கிவிட்டேன். பிளஸ்-2 தேர்வு எழுத முடியாது என்று நினைத்தேன்.
ஆனால் என்னுடைய ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தால் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். தினமும் கொஞ்சம், கொஞ்சம் படி போது என ஆசிரியர் தெரிவித்தார். அதைப் போலவே படித்தேன். உட்கார்ந்து கூட படிக்க முடியாது அதனால் படுக்கையில் படுத்துக் கொண்டே படித்தேன். சில வாரங்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் உட்கார்ந்து படித்தேன். தொடர்ந்து இவ்வாறு கடிமையான சவாலுக்கு இடையில் படித்தேன்.
543 மதிப்பெண்கள்:
தேர்வுகளுக்கு என்னை தூக்கிக்கொண்டு தேர்வுக்கு கொண்டு சென்றார்கள். இப்படி பலரின் அன்பாலும், என்னுடைய முயற்சியாலும் தேர்வு எழுதிய நான் 543 மதிப்பெண் எடுத்துள்ளேன். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. உடல்நிலையில் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கிடைக்காத பட்சம் செவிலியர் படிப்பு முடித்து என்னாள் முடிந்த சேவைகளை செய்வேன்” என்றார்.
”மாணவி உமா மகேஸ்வரி பின் தங்கிய பகுதியில் இருந்து படித்து வருகிறார். குடும்ப சூழலில் உள்ளிட்ட பல்வேறு சவால்களை தாண்டி படித்துவரும் உமா மகேஸ்வரி குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காளீஸ்வரன், புஹாரி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.