மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அங்காடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ வடக்கூர் கிராமத்தில் மத்திய அரசின் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 2021-2022 மாவட்ட ஊராட்சி நிதியில் 5 லட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகளானது கடந்த 6 மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பேருந்து நிறுத்தம் கட்டும்போது தரமற்ற சிமெண்ட் மற்றும் மண் கலவைகளை பயன்படுத்தி முறைகேடு செய்த நிலையில் பேருந்து நிறுத்த கட்டிடத்தின் தூண்களை சுற்றியுள்ள சுவர்கள் கையோடு பெயர்த்து வரும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து இது குறித்து அந்த கிராமத்தின் இளைஞர்கள் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று நேரடியாக கள ஆய்வு செய்தபோது பேருந்து நிறத்தம் கட்டியதில் தரமற்ற முறையில் பணி மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து முதற்கட்டமாக இந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் கணேசனிடம் நேரில் விசாரணை நடத்தினர். இதனையடுத்து தரமற்ற முறையில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த பகுதிகளை இடித்துவிட்டு புதிய கட்டுமானத்தை கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இது குறித்து பேசிய கிராம இளைஞர்கள் : எங்களது கிராமத்தில் பேருந்துகள் நிற்கக்கூடிய பகுதி கடந்து நீர்நிலை கண்மாய் பகுதியில் இருக்கக்கூடிய பகுதியில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூட கண்டுகொள்ளாத நிலையில் அதிகாரிகள் ஒப்புதலோடு பணிகள் நடந்ததால் இது போன்ற முறைகேடு ஏற்பட்டுள்ளது.
மேலும் பேருந்து தங்கள் பகுதிக்கு அடிக்கடி வருவதும் இல்லை நாளொன்றுக்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே வருவதால் பள்ளி மாணவர்கள் பணிக்கு செல்லக்கூடியவர்கள் மதுரைக்கு செல்ல முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மேலும் தங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் அமைச்சர் தொகுதி என்ற நிலையிலும் கூட இரவு நேரங்களில் முழுவதுமாக இருளில் மூழ்கிக் கிடப்பதாகவும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.