'ஸ்.....அப்பாடி!, கொரோனா குறைஞ்சுக்கிட்டு வருது என்று மக்கள் சிறிது நிம்மதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 6 மணிமுதல் 5 மணிவரை அத்தியாவசிய இடங்கள் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா முழுமையாக ஒழிந்துவிட்டது போல் மக்கள் மீண்டும் கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்டனர். முழுமையான கட்டுப்பாடுகள் விதித்தால் நோய் கட்டுக்குள் வருகிறது. அதேசமயம் மக்கள் வறுமையில் வாடும் சூழல் ஏற்படுகிறது, என்று தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 



 

ஆனால் இப்போது மக்கள் எந்த விதியையும் பின்பற்றாமல் சுற்றிவருவதையும் காணமுடிந்தது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் மக்கள் வெள்ளத்தை காணமுடிந்தது. கோரிப்பாளையம், சிம்மக்கல், அய்யர்பங்களா, ஆரப்பாளையம், கீழமாசி வீதி என மக்கள் கூட்டம் அள்ளியது. அரசு அலுவலகங்களில்  ஊரடங்கு கடைபிடிக்கவில்லை. அதேபோல் சுகாதார நிலையங்களில் கூட மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், சிலர் மாஸ்க் கூட அணியாமல் சுற்றிவந்ததை பார்க்க முடிந்தது. கீழமாசி உள்ளிட்ட மாசி வீதிகளில் மக்கள் சித்திரை திருவிழா கூட்டம் போல் சுற்றிவர ஆரம்பித்தனர். கொரோனா முடிந்து இயல்புநிலை திரும்பிவிட்டதோ என தோன்ற வைத்தது. கொரோனா குறைந்ததும் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இருப்பினும் தளர்வுகளைப் பயன்படுத்தி, மக்கள் எல்லைகடந்து அலட்சியமாக இருந்தால் கொரோனா மூன்றாவது அலை வெகு விரைவில் வந்துவிடும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

 



 

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்து மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் செல்லப்பாண்டி, "தற்போதைய ஊரடங்கு வரவேற்கத்தக்கது. ஆனால் இன்னும் அத்தியாவசிய பணிகளை விரிவுபடுத்தி இருக்கலாம். நீதிமன்ற வழக்குகளும் அத்தியாவசியம்தான். முன்களப்பணியாளர்கள் போலவே, நீதிமன்ற ஊழியர்களுக்கும் தளர்வு அளிக்கவேண்டும். போக்குவரத்து அனைவருக்கும் முக்கியமான ஒன்று இதனை செயல்படுத்தி கட்டுப்பாடுகள் விதிக்கலாம். பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது. எனவே தடுப்பூசி போன்றவற்றை அதிகப்படுத்திவிட்டு ஊரடங்கு தளர்வுகளையும் அதிகப்படுத்தலாம். அதே சமயம் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், கிருமிநாசினிகள் எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட அரசு விதிகளை தொடந்து கடைபிடிக்க வேண்டும். 

 



 

 

 மேலும் காரைக்குடி தொகுதி ம.நீ.ம சட்ட மன்ற வேட்பாளரும், தமிழக மக்கள் மன்றத் தலைவருமான ச.மீ.இராசகுமார், ”தற்போதைய ஊரடங்கு தளர்வை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். இது மக்களை கொல்ல முயற்சிக்கும் செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. அலோபதிக்கு ஆதரவாகவும், மக்களுக்கு துரோகம் அளிக்கும் நடவடிக்கையாக மாறியிருக்கிறது. இதனை நான் வீட்டில் உறங்கிக் கொண்டு சொல்லவில்லை. கொரோனா நோயாளிகளுடன் தொடர்ந்து பயணித்து அவர்களுக்கு உதவி செய்த நபராகவும், அவர்களின் இறப்பை கண்டு உறைந்து போன நபர்களின் பிரதிநிதியாக கோபத்துடன் பேசுகிறேன். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளை மீட்கவும் கண்டிப்பாக தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் கடுமையான முழு ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும். சிரமமான காரியம் என்றாலும் முழு ஊரடங்கை தவிர நோய் தொற்றை கட்டுப்படுத்த வேறு வழி இல்லை" என்றார்.