நேர்த்திக்கடன் என்றால் கோயில் திருவிழா சமயங்களில் தேர் இழுத்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், தீ மிதித்தல், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்தல், கழுவேற்றுதல் (தசாவதாரம் கமல் போன்று முதுகில் கொக்கி மாட்டித் தொங்க விடுதல்) உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழாவில் காலையில் சேத்தாண்டி வேடமிட்டு, அதாவது உடல் முழுவதும் சேற்றையும் சகதியையும் பூசி அது நன்கு உலர்ந்த பின்பு கையில் வேப்பமங்குலைகளை பிடித்துக்கொண்டு கோவிலில் அடிக்கும் மேல தாளங்களுக்கு ஏற்ப கோவில் முன்பாக ஆடி நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள். அதேபோன்று மாலையில் உடல் முழுவதும் சாக்குகளை பேண்ட் சட்டைகளாக தைத்து அதை உடையாக அணிந்து முளைப்பாரி செல்லும் பொழுது அதன் முன்பாக சாக்கு வேடமணிந்து ஆடிச் செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகுவல்லி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 5ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழாவின் நிறைவு நாளில் முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஆண்கள், சிறுவர்கள் உடல் முழுவதும் சேற்றை பூசி, சேத்தாண்டி வேடம் அணிந்தும், அக்கினிச்சட்டி, பால்குடம் வேல்குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடனைச் செலுத்தினர். மாலையில் முளைப்பாரி ஊர்வலத்துடன், பக்தர்கள் உடல் முழுவதும் வைக்கோல் நிரப்பப்பட்ட சாக்கு பையை சுற்றிக் கொண்டு வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
’’வேண்டுதல் நிறைவேறுகிறது’’
பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றியதும் சாக்கு வேடமணிந்ததும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அம்மனிடம் வேண்டுதல் வைத்து நிறைவேறிய பக்தர்கள் விநோத முறையில் சாக்கு வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கிராமத்தை சுற்றிவந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இவ்வாறு சாக்கு அணிந்து வந்து வழிபாடு செய்து வந்தால் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் தீய சக்திகளிடம் இருந்து அழகுவல்லி அம்மன் காப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நேர்த்திக்கடன் செய்து முடித்தபின் அழகுவல்லி அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வினோதமான வழிபாட்டை காண கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் செங்கப்படை கிராமத்திற்கு திரண்டு வந்துள்ளனர்.
தமிழகத்தில் தீ மிதிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது போன்ற நேர்த்திக்கடன்கள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் சாக்கு பைகளை ஆடையாக அணிந்து சேற்றை உடலில் பூசி நேர்த்தி கடனை நிறைவேற்றும் நிகழ்வு பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது