ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திஜி நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தான் அடகு வைத்த நகையை திருப்பி மீட்க  வந்த போது, அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர், நான் தான் தற்போது இந்த வங்கியின் மேனேஜர் என  ஏமாற்றி அவரிடமிருந்து பணத்தை வாங்கி அபேஸ் செய்துவிட்டு அங்கிருந்து மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பாண்டியம்மாள் (55). இவர் கணவனை இழந்த நிலையில் வீட்டின் அருகில் அரிசி மாவு புட்டு வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். புட்டு மாவு வியாபாரத்தில் கிடைத்த பணத்தில் இவர் சிறுக சிறுக  சேர்த்து கொஞ்சம் நகை வாங்கியுள்ளார். 




அவ்வாறு வாங்கிய நகையை குடும்ப கஷ்டத்திற்கு வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகையை மீட்பதற்காக ரூபாய் 1.19 லட்சம் பணத்துடன் காந்திஜி நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ்  வங்கிக்கு வந்துள்ளார். அப்போது, இதை அங்கு  நோட்டமிட்டுக்கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நான் இந்த வங்கியில் மேனேஜராக இருக்கிறேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் நான் இந்த வங்கியில் அடகு வைத்துள்ள என்னுடைய நகையை மீட்க வந்துள்ளேன். எனக்கு நகையை மீட்க வேண்டிய படிவத்தை   எழுதி நிரப்பி தந்தால் உதவியாக இருக்கும் என வெகுளியாக கூறியுள்ளார். இதனை அடுத்து எப்போது அந்த நகையை  வைத்தீர்கள்  எவ்வளவுக்கு வைத்தீர்கள் என விவரம் கேட்டுவிட்டு, பணத்தை முழுவதும் என்னிடம் தாருங்கள் நான் உள்ளே சென்று எல்லா வேலைகளையும் முடித்து விட்டு உங்களது நகையை  பத்திரமாக கொண்டு வந்து உங்களிடம் தருகிறேன் என்று கூறி முழு பணத்தையும் அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு வங்கிக்குள் சென்று உள்ளே போய் சிறிது நேரம் அங்கும் இங்கும் உலாவியுள்ளார்.





படிவத்தை நிரப்புவது போல் பாசாங்கு செய்துள்ளார். பின்னர் வெளியே வந்து வங்கிக்கு அருகிலுள்ள கடைக்குச்  சென்று இரண்டு  ஸ்டாம்ப் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவரும் அதை நம்பி ஸ்டாம்ப் வாங்க சென்றுள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட அந்த ஆசாமி,  அந்தப் பெண்ணின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அங்கிருந்து மாயமானார். ஸ்டாம்ப் வாங்க வெளியே சென்ற பாண்டியம்மாள் வங்கிக்குள் வந்து பார்த்தபோது மூதாட்டியை ஏமாற்றி பணத்துடன் மர்ம ஆசாமி  தப்பி ஓடிவிட்டார் என தெரியவந்ததையடுத்து தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் அவர் பதறிப்போனார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து பரமக்குடி குற்றப்பிரிவு போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அந்த வாலிபர் படிக்கட்டுகளில் நடந்து வரும் காட்சிகள் மட்டும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து பாண்டியம்மாள் புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். பரமக்குடியில் பட்டப்பகலில் வங்கியில் மூதாட்டியை ஏமாற்றி 1.19 லட்சம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




வங்கி உள்ளிட்ட பொது இடங்களில் தங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கணவனை இழந்த அந்த பெண் புட்டு மாவு விற்பனை செய்து சிறுகச் சிறுக சேமித்த பணத்தில் வாங்கிய நகையை குடும்பச் செலவுக்காக வங்கியில் அடமானம் வைத்து அதை மீட்க வந்த இடத்தில், டிப்டாப்பாக வந்த ஆசாமி தன்னை இந்த வங்கியின் மேலாளர் எனக்கூறி பணத்தை  ஏமாற்றி சென்ற சம்பவம் பெரும் பரிதாபத்தை  ஏற்படுத்தியுள்ளது.