நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் அருகே பிரபல உணவகத்துடன் கூடிய தங்கும் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த முராரி சந்தானம் என்ற 45 வயது மதிக்க நபர் பூட்டிய அறையில் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இன்று காலை நெல்லை சந்திப்பு போலீஸாருக்கு விடுதியில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீஸார் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட முராரி சந்தானத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் உயிரிழந்த முராரி சந்தானம் சென்னை மேடவாக்கம் பகுதியில் மின் சாதன உதிரிபாகம் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த முராரி சந்தானம் கடந்த 27 ஆம் தேதி நெல்லை வந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து உள்ளார்.
நேற்றிரவு அறையில் புதிய படுக்கை விரிப்பு விரிக்கவேண்டும் என தங்கும் விடுதி வரவேற்பறையில் தெரிவித்துவிட்டு காலையில் அறையை காலி செய்வதாகவும் சொல்லி சென்றுள்ளார். காலையில் விடுதி ஊழியர் அறையை காலி செய்வதாக சொன்ன நபர் நீண்ட நேரமாகியும் வரததால் என்ன ஆனது என பார்க்க சென்று கதவை தட்டி நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் முராரி சந்தானம் உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது.
உயிரிழந்த நபர் தற்கொலை செய்து கொண்ட அறையில் உயிரிழந்த நபரால் எழுதப்பட்ட கடிதம் உள்ளிட்டவைகளை கைப்பற்றி தற்கொலைக்கான முழு காரணம் குறித்து தீவிரமாக நெல்லை சந்திப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரபல விடுதியில் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லை சந்திப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை தீர்வல்ல..
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.