கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரும்பாறையை அடுத்த பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் பிரித்திகா (10). இவள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வழக்கம் போல் மாணவி பிரித்திகா பள்ளிக்கு சென்றாள். பின்னர் காலை 11 மணிக்கு வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
இதனால் சக மாணவிகள் அவளை பள்ளி வளாகத்தில் தேடினர். அப்போது விளையாட்டு மைதானத்தில் பிரித்திகா தீயில் எரிந்து உடல் கருகி கிடந்தாள். இதையடுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவள் பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதேநேரம் பிரித்திகா கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் மாணவி பிரித்திகாவின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது.
கொடைக்கானலில் மர்மான முறையில் உயிரிழந்த சிறுமி - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
இதற்கிடையே பிரித்திகா வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் சந்தானலட்சுமி தலைமையிலான போலீசார், மாணவியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கினர். ஆனால் தற்போது வரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இருந்தாலும் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி உயிரிழந்த நாளில் பள்ளியில் பணியில் இருந்த தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர்கள் ராஜதுரை, மணிவேல் ராஜா ஆகியோர் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 பேரையும் இடமாற்றம் செய்து வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அதிகாரி பாண்டித்துரை உத்தரவிட்டுள்ளார். இவர்கள், மேல்மலை கிராமமான கிளாவரை, பூண்டி, பழம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 3 பேரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை வளையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.