உங்களிடம் பழைய நாணயங்கள் இருக்கிறதா? அப்படி என்றால் நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்.,  என்று சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்களை கண்டு ஒரு சிலர்  பழங்காலத்து நாணயங்களை சேகரித்து நாமும் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் நாணயங்கள் சேகரிப்பதுண்டு. ஆனால் இங்கே  நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நாணயங்களை கூட தன் சொந்த பணத்தை செலவு செய்து ஆர்வத்துடன்  சேகரித்து வருகிறார். நாணயச் சேகரிப்பு என்பதை ஒரு கலையாகக் கருதிச் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார். பொதுவாக கிடைக்கக்கூடிய உள்நாட்டு எல்லா வகையான நாணயங்களிலும் சிலவற்றை மட்டும் சேகரிக்கலாம், ஆனால் இவரோ உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு நாணயங்களையும்  சேகரித்துள்ளார்.




ராமநாதபுரம் அருகே உள்ள புல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முனியராஜ். இவர் எட்டாம்  வகுப்பு வரை மட்டுமே  படித்துள்ளார். வானம் பார்த்த பூமியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கிறது வயலை நம்பி இவரது வாழ்க்கை செல்கிறது. இருந்தும் நாணயங்கள் சேகரிப்பதில்  அதிக நாட்டம் உள்ளவராக இருக்கிறார். சிறு வயதிலிருந்தே பழங்கால பண்டைய தமிழர்களின் வாழ்வியலை விளக்கும் நாணயங்களை சேகரிக்க துவங்கினார். இவரிடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 1087 இல் உருவாக்கப்பட்ட 'பணம் ஒன்று' என்ற நாணயம் உள்ளது. இதேபோல் 600 முதல் 700 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர் காலத்து நாணயங்கள்  வெள்ளி நாணயங்கள்,  பல வெளிநாட்டு நாணயங்கள் என இவரிடம் 600க்கும் மேற்பட்ட நாணயங்கள் உள்ளன.




இவரிடம் 1893 இல் வெளியான அரையணா, ஒரு அணா, 1745 மன்னார் கால நாணயம் தவிர நெதர்லாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களையும் அதிகளவு சேகரித்து உள்ளார். சிறு வயதில் இருந்தே நாணயங்கள் சேகரிப்பதில் உள்ள  ஆர்வத்தால்  விவசாயி முனியராஜ், கீழே எங்கு ஒரு நாணயம் கிடந்தாலும் எடுத்து சேகரித்து, குறிப்பாக அண்டை மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி, காளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மன்னர்கள் வணிகர்கள் வர்த்தகம் செய்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளதாள் அங்குள்ள பழங்கால வீடுகளை வீட்டின் உரிமையாளர்கள் இடிப்பதாக தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு சென்று வீட்டில் இடிபாடுகளில் இருந்து ஏதாவது பழைய காலத்து நாணயங்கள்; கிடைத்தால் அதனை  சேகரித்து வைத்து கொள்வார். அதே போல் விருதுகர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்ங்களிலும் சென்று நாணயங்கள் சேகரித்துள்ளார்.



இது வரை  நாணயங்களை சேகரிப்பதற்காக விவசாயி முனியராஜ் ரூபாய் 50 ஆயிரம் மேல் செலவு செய்துள்ளார். இவருக்கு கிடைக்கு பழங்கால நாணயங்கள் குறித்த தகவல் தெரிந்து கொள்ள ராமநாதபுரத்தில் உள்ள நூலகத்தில் வாசகராக சேர்ந்து பழங்கால நாணயங்கள் தொடர்பான புத்தகளை படித்து நாணயத்தின் வரலாறு குறித்த தெரிந்து கொள்கிறார். இப்போது கூடுதலாக அஞ்சல்தலைகள் பேனாக்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆயிரம் வகையான பேனாக்களை சேகரித்து வைத்துள்ளார். விவசாயி விவசாயத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தும் இந்த காலத்தில் அதில் இருந்து சற்றும் விலகி பழங்கால நாணயங்கள் மற்றம் அதன் வரலாறு உள்ளிட்டவைகளை தேடி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்த விவசாயிடம் இன்று நூற்றுக்கணகான வரலாற்று நாணயங்கள் உள்ளது என்பது ஆச்சரியத்திற்குறியதே.