முதல் போக பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக நெல் சாகுபடி பணிகள் செய்ய விவசாயிகள் ஆயத்தம்.
தமிழகத்தில் தேனி ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை . இந்த அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவகுனங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதில் முக்கிய பங்காக நெல் விவசாயம் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கான உழுதல் நாற்று நடுதல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர் இந்நிலையில் தற்போது ஜூன் முதல் வாரமான கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு உத்தரவின் பேரில் தேனி மாவட்ட முல்லைப் பெரியாற்று பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது
தண்ணீரானது விவசாயத்திற்கு அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடியும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி என 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது . இந்நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 200 கன அடியிலிருந்து 800 கன அடியாக நீர் திறப்பு உயர்த்தப்பட்டு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் தேனி மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தற்போதைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் ஆனது 131 அடி அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 605 கன அடியாகவும் இருந்து வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கம்பம் ,சுருளிப்பட்டி, நாராயண தேவன் பட்டி ,கருனாக்கமுத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக நிலத்தை டிராக்டர் மூலம் உழுதல் நாற்று பாவுதல் போன்ற பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்ற வருடத்தில் போதிய மழையின்மையால் முதல்போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறப்பது காலதாமதமான நிலையில் இரண்டாம் போக சாகுபடியும் காலதாமதமாகாவே விவசாயம் நடைபெற்றது. இந்த சூழலில் இந்த வருடத்தில் சென்ற மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையான நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து இருந்த நிலையில், தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயத்திற்கான வழிவகை சரியான கால சூழலில் ஏதுவாகியுள்ளது.